சமோலி:உத்தரகாண்ட் மாநிலம், ஜோஷிமத் நகரில் கடந்த 6ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெடிப்பால், பல்வேறு வீடுகள் மற்றும் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டடங்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. சிதிலமடைந்த இரு விடுதிகள் இடித்து அகற்றப்பட்டன. ஏறத்தாழ 800க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமானதாக மாநில அரசு எடுத்த கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
நில அதிர்வு காரணமாக ஜோஷிமத் நகரம் மண்ணுக்குள் புதைந்து வரும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகின. ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நிதி நிவாரணங்களை அரசு அறிவித்தது.
நில வெடிப்புக்குள்ளான ஜோசிமத் நகரில் தேசிய அனல் மின் கழகத்தின் விஷ்ணுகட் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தால் ஜோசிமத் நகரில் நிலச்சரிவு மற்றும் நில வெடிப்புகள் உள்ளிட்ட பேரிடர்கள் உருவானதாக கூறப்படுகிறது.