டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், ஜோஷிமத் நகரில் கடந்த 6ஆம் தேதி ஏற்பட்ட நிலச் சரிவு மற்றும் வெடிப்பால், பல்வேறு வீடுகள் மற்றும் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டடங்களை வீரர்கள் இடித்து அகற்றினர். இதனிடையே நில அதிர்வு காரணமாக ஜோஷிமத் நகரம் மண்ணுக்குள் புதைந்து வரும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகின.
சம்பவ இடத்தை பார்வைட்யிட்ட உத்ரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதியில் இருந்த மக்கள் அரசு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
மேலும் ஜோஷிமத் நகரில், புவியியல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நில வெடிப்பால் வீடுகளில் விரிசல் ஏற்பட்ட மக்களுக்கு அம்மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. வீடுகளை இழந்து அரசு முகாம்களில் தவிக்கும் பொது மக்களுக்கு இடைக்கால உடனடி உதவியாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உத்தரகாண்ட் முதலமைச்சரின் செயலாளர் ஆர்.மீனாட்சி சுந்தரம் கூறியதாவது, நில அதிர்வால் இரு பெரிய உணவு விடுதிகளில் விரிசல் ஏற்பட்டு அபாய கட்டத்தில் இருப்பதாகவும், கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுதவிர வேறு எந்த கட்டடங்களும் இடிக்கப்படவில்லை என்றார்.