ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் திங்கள் கிழமை ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற மதக் கொடியேற்றும் நிகழ்வில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் கலவரமாக மாறி, கல்வீச்சு தாக்குதல் நடந்தது. கலவரம் தொடர்பாக சிலர் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோத்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவையை முடக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதையடுத்து கலவரத்தில் தொடர்புடையதாக கூறி ஜோத்பூரில் 97 பேர் கைது செய்யப்படுள்ளதாக செவ்வாய் கிழமை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜோத்பூர் மாவட்டம் முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உயர் காவல் அதிகாரிகள் பாதுகாப்புக் கருதி இங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டுள்ளனர் என மாவட்ட தலைமை காவல் அதிகாரி ஹவா சிங் குமாரியா கூறினார்.
ஆளுநருக்கு கடிதம்: இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சியின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் பூனியா, ஆளுநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஜோத்பூரில் நடந்த வன்முறை தொடர்பான சம்பவங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதை உறுதி செய்ய அரசுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கவும் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சம்பவங்கள் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதை ஆளுநர் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் ஆளுநருக்கு எழுதிய அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஆளுநர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கலவரத்திற்கான காரணம்:முதலமைச்சர் அசோக் கெலாட்டின் சொந்த மாவட்டமான ஜோத்பூரில் உள்ள ஜலோரி கேட் வட்டத்தில் ஈத் தொழுகையைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. கும்பலை கலைக்க காவல் துறையினர் தடியடி நடத்தினர்.