ஜம்மு:காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத், கடந்த வெள்ளிக்கிழமை (ஆக. 26) அன்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக 2005 -2008 காலகட்டங்களில் பதவிவகித்தார்.
கடந்த 50 ஆண்டுகாலமாக கட்சிப்பணியாற்றிய அவர், அக்கட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தொடர்ந்து, பாஜகவில் இருந்து இணையப்போவதாக வெளியான தகவலை மறுத்த அவர், ஜம்மு காஷ்மீரில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கப்போவதாகத் தெரிவித்தார்.
அவரின் விலகலை அடுத்து, முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டப் பல காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து இருந்து விலகியுள்ளனர். உள்ளாட்சி உறுப்பினர்கள் உள்பட பல்வேறு அடுக்குகளில் அவருக்கு ஆதரவு உள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் தாரா சந்த் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள், அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.