ஜம்மு காஷ்மீரில் 280 மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்களுக்கு தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், வரலாற்றில் முதல்முறையாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜக தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள கோன்மோ - II வார்டில் பாஜக வேட்பாளர் பொறியாளர் இஜாஸ் உசேன் வெற்றிபெற்றுள்ளார். இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஷாநவாஸ் உசேன் தனது ட்விட்டர் பக்கத்தில், "காஷ்மீரில் முதல் தாமரை மலர்ந்துள்ளது.
காஷ்மீரில் மலர்ந்த முதல் தாமரை
ஸ்ரீநகரில் உள்ள கோன்மோ - II வார்டில், நல்ல வாக்கு வித்தியாசத்தில் பொறியாளர் இஜாஸ் உசேன் வெற்றிபெற்றுள்ளார்" எனப் பதிவிட்டுள்ளார்.
பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய துணை தலைவராக உள்ள இஜாஸ் உசேன், மேற்குவங்க இளைஞரணி பொறுப்பாளராகவும் உள்ளார்.
இதுகுறித்து இஜாஸ் கூறுகையில், "குப்கார் தீர்மானத்திற்கான மக்கள் கூட்டணிக்கு எதிராக போட்டியிட்டு இந்த வார்டை இன்று கைப்பற்றியுள்ளோம். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பிறகு நடைபெற்ற இந்த முதல் தேர்தலில், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பிராந்திய கட்சிகள், குப்கார் தீர்மானத்திற்கான மக்கள் கூட்டணி என்ற பெயரில் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தன.
தற்போது, இந்த கூட்டணி, 81 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. பாஜக 47 இடங்களிலும் காங்கிரஸ் 21 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
ஜம்முவில் பின்னடைவை சந்திக்கும் குப்கார் கூட்டணி
அதில், ஜம்முவை பொறுத்தவரை, பாஜக 44 இடங்களிலும் குப்கார் கூட்டணி 20 இடங்களிலும் முன்னிலை வகித்துவருகின்றன. காஷ்மீரில் குப்கார் கூட்டணி 61 இடங்களிலும் பாஜக மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.