தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Hyderpora encounter: நீதி விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் உத்தரவு - அமீர் மேக்ரே

ஹைதர்போரா பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் (Hyderpora Encounter) இரண்டு பொதுமக்கள் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில், நீதி விசாரணைக்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.

Hyderpora encounter, ஹைதர்போரா துப்பாக்கிச்சூடு
Hyderpora

By

Published : Nov 18, 2021, 6:26 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் ஹைதர்போரா பகுதியில் கடந்த திங்கள் கிழமை மாலை (நவ.15) காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில், அல்தாஃப் அகமது பட், டாக்டர் முதாசீர் குல், அமீர் மேக்ரே, ஹைதர் (அ) பிலால் பாய் ஆகிய நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், அவர்களின் உடல் வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்தவாரா பகுதியில் அடக்கம் செய்யப்பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர்.

மூவரும் அப்பாவியா?

சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரில் அல்தாஃப் அகமது பட், டாக்டர் முதாசீர் குல் ஆகியோர் ஸ்ரீநகர் பகுதியினர் எனவும் அமீர் மேக்ரே, ரம்பன் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. குறிப்பாக, இவர்கள் மூவரும் எந்தவித பயங்கரவாத அமைப்பையும் சாராத அப்பாவிகள் என அவரிகளின் குடும்பத்தார் உள்பட சிலர் கடந்த மூன்று நாள்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

ஹைதர்போரா துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தார் போராட்டம்

இதையடுத்து, காஷ்மீர் காவல் துறை தலைவர் விஜய் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கட்டடத்தின் உரிமையாளர் அல்தாஃப் அகமது துப்பாக்கிச்சூட்டில் தவறுதலாக உயிரிழந்துவிட்டார் எனக் கூறினார். இருப்பினும், முதாசீர் குல் பயங்கரவாதியின் ஆதரவாளர் (Over Ground Worker) என்றும், அமீர் மேக்ரே என்பவர் பயங்கரவாதி ஹைதரின் கூட்டாளி (Hybrid Militant) என்றும் தெரிவித்தார்.

குடும்பத்தாரின் தொடர் போராட்டம்

இதன் பின்னர், அல்தாஃப், டாக்டர் குல் இருவரின் குடும்பத்தாரும் அமைதியாகப் போராடிவந்த நிலையில், குடும்பத்தாரையும், போராட்டக்காரர்களையும் நேற்றிரவு (நவ.17) காவலில் எடுத்து பின்னர் விடுவித்தனர்.

தொடர்ந்து, காஷ்மீரின் அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், அப்பாவிகளின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் நீதிமன்ற விசாரணைக்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஹைதர்போரா விவகாரத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி (Additional District Magistrate) படிநிலையிலான அலுவலரிடம் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உரிய காலக்கெடுவுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கும். ஜம்மூ காஷ்மீர் நிர்வாகம் அப்பாவி பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. அங்கு அநீதி நடைபெறவில்லை என்பதை உறுதி செய்யும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Viral Video: அசால்ட் காட்டிய யானையின் அசத்தல் காணொலி

ABOUT THE AUTHOR

...view details