தும்கா:ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் சுமார் 33 அரசுப்பள்ளிகள், வெள்ளிக்கிழமையை வாராந்திர விடுமுறை நாளாக மாற்றியுள்ளன. பள்ளிகளின் பெயர்களுக்குப் பின்னால் "உருது பள்ளி" என்றும் சேர்க்கப்பட்டுள்ளது. அரசிடம் உரிய அனுமதி பெறாமல் பள்ளிகள் தன்னிச்சையாக இந்த மாற்றத்தை செய்துள்ளன. இதுதொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் விளக்கம் கேட்டு, சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதேபோல் எத்தனை பள்ளிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "இந்த குறிப்பிட்ட பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், இந்தி அல்லது உருது மொழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதனால் சிறுபான்மையின மாணவர்களுக்கு ஏற்றார்போல் வெள்ளிக்கிழமையை வார விடுமுறையாக மாற்றியுள்ளனர். பள்ளியில் சனிக்கிழமை வாரத்தின் முதல்நாளாக கருதப்படுகிறது" என்று கூறினார்.