ஜார்க்கண்ட்:தன்பாத் அருகே உள்ள பவ்ரா கோலியரி என்ற பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கம் இன்று (ஜூன் 9) காலையில் திடீரென சரிந்து விழுந்தது. இதில், சுரங்கத்தில் பணியிலிருந்து ஊழியர்கள் சிலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதில் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிகிறது. சிலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இது குறித்து பவ்ரா காவல் நிலைய ஆய்வாளர் பினோத் ஓரான் கூறுகையில், “சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், உடனடியாக வந்து மீட்புப் பணியை தொடங்கினோம்” என்றார்.
உள்ளூர் வாசி ஒருவர் கூறுகையில், “அதிகாரிகள் மற்றும் போலீசார் மிகவும் தாமதமாகவே சம்பவ இடத்துக்கு வந்தனர். நாங்களே சிலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும் வரை நாங்கள் போராட்டம் நடத்துவோம். இப்பகுதியில் பல இடங்களில் சட்டவிரோத சுரங்கங்கள் செயல்படுகின்றன. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை” என்றார்.