கடந்த 1992-1993ஆம் ஆண்டு பிகார் மாநில முதலமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார். அப்போது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ரூ.950 கோடி ஊழல் செய்ததாகவும், சாய்பாசா கருவூலப் பணத்தில் ரூ.33.67 கோடி மோசடி செய்ததாகவும் ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
அந்த வழக்கில், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து, அவர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவின் உடல் நிலையைக் காரணம் காட்டி அவருக்கு கால்நடை தீவனம் ஊழல் வழக்கு, சாய்பாசா கருவூலப் பண மோசடி வழக்கு ஆகிய இரு வழக்குகளில் ஜார்க்கண்ட் நீதிமன்றம் பிணை வழங்கியது.
கால்நடை தீவனம் ஊழல் வழக்கு, சாய்பாசா கருவூலப் பண மோசடி வழக்கு ஆகிய இரு வழக்குகளில் பிணை பெற்றாலும் தும்கா கருவூல ஊழல் வழக்கின் காரணமாக சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.