பாகுர் :ஜார்கண்ட் மாநிலத்தில் 28 வயது இளம் பெண் 10 முதல் 12 மர்ம நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலம் மகேஷ்பூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தன் காதலருடன் வெளியேற சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இருவரையும் வழிமறித்த ஒரு கும்பல், இளம் பெண்ணை தாக்கி தூக்கிச் சென்று மறைவான இடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் இருந்து தப்பிய இளம் பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்து உள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இளம் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆனதாக கூறப்படும் நிலையில், இதுவரை ஒருவரை கூட போலீசார் கைது செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய அமபடா துணை மண்டல காவல் அதிகாரி அஜித் குமார் விமல், இளம் பெண் தன்னை 10 முதல் 12 மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்து உள்ளதாகவும் அதேநேரம் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்த போதிய ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் காதலரின் பெயரை கூட வெளியிட இளம் பெண் மறுப்பதாக போலீஸ் அதிகாரி தெரிவித்து உள்ளார். சம்பவம் இடத்தில் உள்ள தடயங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அதைக் கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் இளம் பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க :பெண்ணின் வயிற்றில் கத்திரிகோல்கள் வைத்து தைத்த கொடூரம்.. 7 ஆண்டுகளுக்கு பின் விசாரணை அறிக்கை தாக்கல்!