சென்னையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ இன்று காலமானார். அவரது மறைவுக்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நுரையீரல் பாதிப்பு காரணமாக ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கரோனா பாதிக்கப்பட்ட ஜகர்நாத் மஹ்தோவுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜகர்நாத் மஹ்தோவை, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேரில் வந்து பார்த்து நலம் விசாரித்துச் சென்றார்.
ஜகர்நாத் மஹ்தோவுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டு இருந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கரோனா தொற்றால் நுரையிரல் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக ஜகர்நாத் மஹ்தோ கடும் அவஸ்தைகளை அனுபவித்து வந்தார்.
56 வயதான ஜகர்நாத் மஹ்தோ, தும்ரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநில கல்வி அமைச்சர் பதவிக்கு உயர்ந்தார். அவரது மறைவுக்கு ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Jharkhand CM Hemant Soren Tweet ஜகர்நாத் மஹ்தோ நுரையிரல் பாதிப்பால் உயிரிழந்த செய்தியை தெரிவித்த ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தனது ட்விட்டர் பக்கத்தில், "நம்ம புலி ஜாகர்நாத் இனி இல்லை. இன்று ஜார்கண்ட் அதன் மாபெரும் கிளர்ச்சியாளர், போராடும் தன்மை கொண்டவர், கடின உழைப்பாளி மற்றும் தலைவரை இழந்து உள்ளது. கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ சென்னையில் சிகிச்சை பலனின்றி காலமானார்" என தெரிவித்து உள்ளார்.
இதனிடையே சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு சென்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜார்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிங்க :Today Gold Rate: தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?