ராஞ்சி:ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் நிலக்கரி சுரங்க ஊழலில் சிக்கியுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தை மீறியதால், சோரனை எம்எல்ஏ பதிவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.
இதனால், சோரனின் முதலமைச்சர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜார்க்கண்ட்டில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவினர் சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து எம்எல்ஏக்களை பாஜகவிடமிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையில் சோரன் ஈடுபட்டு வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் சோரன், எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு குந்தி மாவட்டத்திற்குச் சென்றார். அங்கு எம்எல்ஏக்களுடன் நேரம் செலவிட்டார், படகு பயணம் செய்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், ஜார்க்கண்ட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியால் எம்எல்ஏக்களை காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு அழைத்துச்செல்ல ஹேமந்த் சோரன் திட்டமிட்டுள்ளார். அதன்படி இன்று(ஆக.30) முதலமைச்சர் மாளிகையில் இருந்து எம்எல்ஏக்கள் ராஞ்சி விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர், அங்கிருந்து ராய்ப்பூருக்கு புறப்பட்டனர். ராய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் எம்எல்ஏக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கு முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:ஜார்க்கண்ட்டில் அரசியல் நெருக்கடி... சொகுசு விடுதிக்கு பயணமாகும் எம்எல்ஏக்கள்...