தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாங்கள் இருக்கும்வரை ஜார்க்கண்ட்டில் பாஜகவின் சதித்திட்டங்கள் நிறைவேறாது - பெரும்பான்மையை நிரூபித்த பிறகு சோரன் விளாசல்... - நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

ஐக்கிய முற்போக்கு கூட்டணி இருக்கும்வரை ஜார்க்கண்ட்டில் பாஜகவின் சதித்திட்டங்கள் நிறைவேறாது என முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.

Jharkhand
Jharkhand

By

Published : Sep 5, 2022, 4:53 PM IST

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் மீது நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக பாஜகவினர் புகார் அளித்தனர். மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தை மீறியதால், சோரனை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இதனால், சோரனின் முதலமைச்சர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதையடுத்து ஜார்க்கண்ட்டில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதித்திட்டம் தீட்டுவதாகவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இதனால், பாஜகவிடமிருந்து எம்எல்ஏக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மும்முரமாக ஈடுபட்டார்.

எம்எல்ஏக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்த சோரன், அவர்களுடன் தொடர்ந்து நேரம் செலவிட்டு வந்தார். இதனையடுத்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் ஹேமந்த் சோரன் முடிவு செய்தார். பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சிறப்புக் கூட்டத் தொடரை கூட்ட சபாநாயகர் உத்தரவிட்டார்.

அதன்படி, இன்று(செப்.5) ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதற்கிடையே நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பெரும்பான்மையை நிரூபித்தார், சோரன். 81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் 48 எம்எல்ஏக்கள் ஆதரவோடு ஹேமந்த் சோரன் பெரும்பான்மையை நிரூபித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஹேமந்த் சோரன், "எங்கள் கூட்டணி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜகவினர் முயற்சித்தனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி இருக்கும்வரை ஜார்க்கண்ட்டில் பாஜகவின் சதித்திட்டங்கள் நிறைவேறாது.

ஆங்காங்கே கலவரத்தையும், வன்முறைகளையும் தூண்டவும், உள்நாட்டுப் போர்களை ஏற்படுத்தவும் பாஜகவினர் முயற்சிக்கின்றனர். அவ்வாறு கலவரங்களை ஏற்படுத்தி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள். இதுபோன்ற செயல்கள் மூலம் கிடைக்கும் ஆட்சி நிலைக்காது, மேலும் நாங்கள் இருக்கும் வரை, இதுபோன்ற சதித்திட்டங்கள் மூலம் பாஜக ஆட்சிக்கு வர நினைப்பது ஒருபோதும் நடக்காது" என்று கூறினார்.

இதையும் படிங்க:ஜார்க்கண்ட் அரசியல் நெருக்கடி... ராய்ப்பூர் செல்லும் எம்எல்ஏக்கள்...

ABOUT THE AUTHOR

...view details