கோவாவில் உள்ள பெனாலிம் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) இரண்டு சிறுமிகள் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர்.
இது தொடர்பாக பேசிய அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த், “`தங்கள் மகள்கள் இரவு நேரத்தில் ஏன் தாமதமாக வீடு திரும்புகிறார்கள் என்பதை பெற்றோர் அறியவேண்டும். குறிப்பாக 14 வயதுகளில் இருக்கும் அச்சிறுமிகள் இரவு முழுக்கக் கடற்கரையில் இருப்பதன் காரணத்தை பெற்றோர் தெரிந்துகொள்ளவேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பைப் பெற்றோரே உறுதிசெய்யவேண்டும். அரசையும் காவல்துறையையும் மட்டுமே குறைசொல்லக்கூடாது” என்று தெரிவித்தார். இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்தது. பலருக்கு அவருக்கு எதிராக குரல் எழுப்பினர்.
பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட முதல் தலைவர் இவர் கிடையாது. பல தலைவர்கள், பெண்கள் குறித்து, பாலியல் வன்புணர்வு குறித்தும் சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அவை பின்வருமாறு,
1. தீரத் சிங் ராவத்
உத்தரகண்ட் முன்னாள் முதலமைச்சர் தீரத் சிங் ராவத், முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் பெண்களின் ஜீன்ஸ் குறித்து பொறுப்பற்ற கருத்தை பதிவிட்டு சிக்கலில் சிக்கினார். அப்போது, கிழிந்த ஜீன்ஸை சடங்கு ஒன்றுடன் தொடர்புபடுத்தி வசமாக சிக்கிக் கொண்டார். முதலமைச்சர் பதவியையும் இழந்தார்.
2. மீனா குமாரி
உத்தரப்பிரதேச மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான மீனா குமாரி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. உண்மையான பிரச்னை செல்போன் தான். பெண்கள் மணிக்கணக்கில் செல்போனில் பேசிக்கொண்டிருக்கின்றனர். அதில் ஆண்களும் அடங்கும். பெற்றோர் பிள்ளைகளின் மொபைல்களை சோதனை செய்வதில்லை. இறுதியாக, செல்போனில் பேசிய ஆணுடன் அவர்கள் ஓடி சென்றுவிடுகிறார்கள்” என்று குண்டை தூக்கிப்போட்டார். அடுத்து பலரிடம் வசையும் வாங்கிக்கொண்டார்.
3. முலாயம் சிங் யாதவ்
சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் யாதவ், பேரணி ஒன்றில் கலந்துக்கொண்ட போது, பாலியல் வன்புணர்வு வழக்குகள் குறித்து பேசினார். அவர், ஆண்கள், பெண்கள் இடையை கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெண், தான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறுகிறார். உடனே, அந்த ஏழை சிறுவன் தூக்கிலிடப்படுகிறான். பாலியல் வன்புணர்வுக்காக தூக்கிலிடுவதா? ஆண்கள் சிறு தவறுதானே செய்கிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
4. சரத் யாதவ்
1997 ஆம் ஆண்டு பெண்கள் இடஒதுக்கீடு மசோதா விவாதிக்கப்பட்டு வந்தது. சரத் யாதவ், "மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம், பிரிந்து வாழும் பெண்களை அவையில் கொண்டு வர விரும்புகிறீர்கள்" என்று கூறியிருந்தார். இதற்கு அவர் மன்னிப்பு கோரும் வகையில் அமைந்தது.
அதே போல, 2017 ஆம் ஆண்டில், யாதவ் "மகள்களின் மரியாதையை விட வாக்கெடுப்பின் மரியாதை அதிகமாக உள்ளது. மகளின் மரியாதை இழக்கப்பட்டால், கிராமம் மற்றும் வட்டாரத்தின் மரியாதை மட்டுமே இழக்கப்படும், ஆனால் வாக்கெடுப்பு விற்கப்பட்டால், நாட்டின் மரியாதையே இழக்க நேரிடும் எனத் தெரிவிததார்.
5. கைலாஷ் விஜய்வர்கியா
பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா, " பெண்களின் மேக்அப் மரியாதை வரவழைக்க வேண்டும், மாறாக உற்சாகத்தை வரவழைக்ககூடாது. பொதுவாக பெண்கள் லட்சுமணன் கிழித்த கோட்டை தாண்டாமல் இருப்பது நல்லது. வரம்பு நிச்சயம் உண்டு. பெண்கள் கண்ணியத்தை தவறும் பட்சத்தில், தூக்கிசென்றுவிடுவார்கள். லட்சுமணன் ரேகை ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டு. அதை மீறினால், ராவணன் கடத்தி சென்றுவிடுவான்” என்றார்.
6. திக்விஜய் சிங்
காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், தனது சொந்த கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. குறித்து பொதுக் கூட்டத்தில் ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக வழக்கும் பதியப்பட்டது.
7. அபிஜித் முகர்ஜி
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யான அபிஜித் முகர்ஜி, நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக பேராடியா பெண்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அவர், கையில் மெழுகுவர்த்தியுடன் சாலைக்கு வருவது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. முதலில் டிஸ்கோவுக்கு செல்ல வேண்டும், பின்னர், இந்தியா கேட்டில் வந்து போராட்டம் நடத்த வேண்டும்” என்றார்.
8. நரேஷ் அகர்வால்
உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறிய பாலியல் வழக்கு வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நரேஷ் அகர்வால் அறிக்கை வெளியிட்டிருந்தார். அவர், ஒரு மிருகத்தை கூட அதோடு அனுமதியில்லாமல் தொட முடியாது எனத் தெரிவித்தார்.
9. அனிசூர் ரஹ்மான்
2012-ல் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சிபிஐஎம் தலைவர் அனிசூர் ரஹ்மான், " மம்தா தீதிக்கு எவ்வளவு இழப்பீடு தேவை. பாலியல் வன்புணர்வுக்கு எவ்வளவு பணம் வாங்குவார்? என்றார். இது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாலியல் வன்புணர்வு ஆளானவர்களுக்கு இழப்பீடு அறிவித்ததை தொடர்ந்து வெளியானது. இறுதியாக, தனது பேச்சுக்கு அனிசூர் ரஹ்மான் மன்னிப்பு தெரிவித்தார்.
10. ஷீலா தீட்சித்
டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித், 2008இல் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை செய்யப்பட்டது குறித்து பேசினார். அவர், பெண்கள் மிகவும் சாகசமானவராக இருக்கக்கூடாது. இவர் அதிகாலை மூன்று மணிக்கு தனியாக வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது நகரமே இருட்டாக இருந்தது. அச்சமயத்தில் பெண்கள் வெளியே செல்வது பாதுகாப்பானதாக கருதப்படவில்லை, இதற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நினைக்கிறேன் என்றார். ஷீலா தீட்சித் முதலமைச்சராக இருந்த சமயத்தில் தான்,டெல்லியில் செளமியா விஸ்வநாதன் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
11. மம்தா பானர்ஜி
சுதந்திரம் தான் பாலியல் வன்புணர்வுக்கு காரணம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். சிறுவர்கள், சிறுமிகளுக்கு பெற்றோர் அளித்த சுதந்திரத்தின் காரணமாகவே, பாலியல் வன்புணர்வு போன்ற சம்பவங்கள் நடக்கின்றன எனத் தெரிவித்தார்.
12. சிரஞ்சித் சக்கரவர்த்தி
பாலியல் வன்கொடுமை குறித்து டிஎம்சி தலைவர் சிரஞ்சித் சக்ரவர்த்தி, " நாளுக்கு நாள் அணியும் ஆடைகள் குறைந்து வருவதால், பாலியல் வன்புணர்வுக்கு அப்பெண்கள் தான் பொறுப்பாகும். பெண்களுக்கு பாலியல் வன்புணர்வு நடைபெறுவது ஒரு புதிய நிகழ்வு அல்ல. இது போன்ற சம்பவம் பழங்காலத்திலிருந்தே நடக்கிறது. இது ஒரு சிறிய சம்பவம். இது போன்ற சம்பவம் நடக்கவில்லை என்றால் எப்படி திரைப்படம் எடுத்திட முடியும்? படத்தில் வில்லன் இருப்பது அவசியம். ராமாயணத்தில் ராவணன் இருப்பான், இல்லையா? " எனக் கூறினார். சிரஞ்சித் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர் ஆவர்.
13. அஸம் கான்
2019 லோக்சபா தேர்தலின் போது, சமாஜ்வாதி கட்சி தலைவர் அஸம் கான், ஜெய பிரதாவை குறிவைத்து பேசினார். அவர், ராம்பூருக்கு கையை பிடித்து அழைத்துவந்து, அவரை மக்களின் பிரதிநிதியாக்கினோம். அவரது நோக்கங்களைக் கண்டுபிடிக்க 10 ஆண்டுகள் ஆனது. ஆனால், நான் 17 நாள்களில் அவளது உள்ளாடை காக்கி நிறம் என்பதை கண்டுபிடித்துவிட்டேன் என்றார்.
14.பன்சிலால் மகதோ
சத்தீஸ்கரின் கோர்பாவைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்.பி., பன்சிலால் மஹ்தோ, 2017 ஆம் ஆண்டில், மும்பை (ரெட் லைட்), கொல்கத்தாவிலிருந்து (சோனாகாச்சி) பெண்கள் வேண்டாம், கோர்பாவின் துரி மற்றும் சத்தீஸ்கர் மாநில பெண்களே அவ்வாறு ஆக மாறிவிட்டார்கள் எனக் கூறினார்.
15.ஜிதேந்திர சாட்டர்
ரியானாவின் ஜிந்த் மாவட்டத்தை சேர்ந்த காப் அமைப்பின் தலைவரான ஜிதேந்திர சாட்டார், பாலியல் வன்புணர்வு பாஸ்ட் புட் தான் காரணம் எனக் கூறினார். அவரைப் பொறுத்தவரை, பாஸ்ட்-புட் சாப்பிடுவதன் மூலம் இளைஞர்கள், பெண்களின் ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, அவர் அத்தகைய செயல்களில் ஈடுபட தூண்டப்படுகிறார்கள்.
16. விப ராவ்
சத்தீஸ்கர் மகளிர் ஆணையத் தலைவர் விபா ராவ், “பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பெண்கள் தான் பொறுப்பு என்று கூறியிருந்தார். அவர், "பெண்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு, அவர்களது ஆடை, நடவடிக்கைகளில் மாற்றம் கொள்கின்றனர். இது ஆண்களுக்கு தவறான கண்ணோட்டத்தில் அணுக வழிவகுக்கிறது” என்றார்.
17. வி தினேஷ் ரெட்டி
ஆந்திராவின் டிஜிபியாக இருந்த வி தினேஷ் ரெட்டி, " பெண்கள் அணியும் தூண்டும்விதமான ஆடை தான், பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்கு காரணமாக அமைகிறது என்றார். 2011 இல், ஆந்திராவில் மொத்தமாக 1,290 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
18. சிசி பாட்டில்
கர்நாடகாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக இருந்த சிசி பாட்டீல், " பாலியல் சம்பவங்கள் அதிகரிப்புக்கு பெண்களின் ஆடை தான் காரணம்.உடலில் எந்த பாகத்தை காட்ட வேண்டும், எதை மறைக்க வேண்டும் என்பதை அந்தப் பெண் அறிந்திருக்க வேண்டும்" என்றார்.
19. அபு ஆஸ்மி
சமாஜ்வாடி கட்சியின் அபு ஆஸ்மி, " சக்கரை இருந்தா எறும்பு வர தான் செய்யும். பெட்ரோல் இருந்தா தீப்பிடிக்க தான் செய்யும். இப்போதெல்லாம், பெண்கள் நிர்வாணமாக இருந்தாலும், நாகரீகமாக இருக்கீறார்கள். என்னோட குடும்பத்தை சேர்ந்த பெண் யாராச்சும் புத்தாண்டு கொண்டாடத்துக்கு சென்றாலும், அவங்க கூட கணவரோ, தந்தையோ, சகோதரனோ இல்லையென்றால், அது தவறு தான் என்றார்.
20. அசராம் பாபு
பாலியல் வன்புணர்வு வழக்கில் அசராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, ஆனால், அவர் நிர்பயா வழக்கு குறித்து அபத்தமான கருத்தை கூறினார். ஒரு கையால் கை தட்ட முடியாது. அதே போல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர், குற்றவாளிகளை சகோதரர்கள் என்று அழைத்திருந்தால், அவரது கெளரவத்தையும் உயிரையும் காப்பாற்ற முடியும்" என்றார்.
21. கிரண் பேடி
அன்னா ஹசாரே போராட்டக்குழுவில் இருந்த போது நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அலுவலரான கிரண் பேடி, “10 முதல் 15 அமைச்சர்கள் வரை பெருமளவு ஊழல் செய்திருக்கிறார்கள். அவர்கள் குறித்த ஆவணங்களை பிரசாந்த் பூஷணும், அரவிந்த் கெஜ்ரிவாலும் வெளியிட்டுள்ளனர். இதையெல்லாம் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை, மாறாக எங்கேயோ ஒரு மூலையில் நடக்கும் பாலியல் வன்புணர்வை பேசி பெரிதாக்குகிறார்கள்” எனப் பேசினார்.
இதையும் படிங்க:கர்நாடகத்தில் பொம்மை ஆட்சி.. பலிக்குமா எடியூரப்பா கனவு?