பெங்களூரு:முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் சகோதரர் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட மஞ்சு தோல்வியடைந்தார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஒரே ஒரு எம்பியாக பிரஜ்வல் ரேவண்ணா இருந்தார்.
இதையடுத்து, 2019 மக்களவைத் தேர்தலின்போது பிரஜ்வல் ரேவண்ணா சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் பொய்யான தகவல்களை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, பிரஜ்வல் ரேவண்ணாவால் தோற்கடிக்கப்பட்ட மஞ்சு உள்ளிட்டோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மஞ்சு தனது மனுவில், பிரஜ்வல் ரேவண்ணா தனது வங்கிக் கணக்கில் இருந்த வைப்புத் தொகை, சொத்து விபரங்கள் உள்ளிட்டவற்றை தவறாக கணக்கு காட்டியிருப்பதாக தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, வங்கி கணக்கு ஒன்றில் 48 லட்சம் ரூபாய் இருந்த நிலையில், 5 லட்சம் மட்டுமே இருப்பதாக தெரிவித்ததாகவும், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை 14 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்டது என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் மஞ்சு தெரிவித்தார். வருமான வரிக் கணக்கில் மோசடிகள் செய்து இந்த சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியுள்ளதாகவும், அது மட்டுமல்லாமல் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பினாமிகள் பெயரில் பல சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதனால், பிரஜ்வல் ரேவண்ணாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் மஞ்சு கோரியிருந்தார். பிரஜ்வல் ரேவண்ணா வெற்றிக்கு எதிராக மஞ்சு உள்ளிட்ட சிலர் தொடர்ந்த வழக்கை ஒன்றாக கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது.