டெல்லி:டெல்லியில் கடந்த 8ஆம் தேதி நடந்த ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்தில், ஜப்பானைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் இளைஞர்கள் சிலர் பாலியல் ரீதியாக அத்துமீறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில், ஜப்பானைச் சேர்ந்த இளம்பெண் மீது இந்திய இளைஞர்கள் சிலர் கலர் பொடியைத் தூவினர், அப்பெண்ணின் தலையில் முட்டையை உடைத்து அநாகரீகமாக நடந்து கொண்டனர். அந்த பெண் அசெளகரியமாக உணர்வதுபோல காணப்பட்டார். இந்த வீடியோவை பாதிக்கப்பட்ட ஜப்பான் பெண் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
வீடியோ வைரலானதையடுத்து, சம்மந்தப்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, டெல்லி மகளிர் ஆணையம் காவல்துறைக்கு பரிந்துரை செய்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தினர். பிறகு வீடியோவில் இருந்த இளைஞர்களை அடையாளம் கண்ட போலீசார், மூவரை கைது செய்தனர். அதில் ஒருவர் சிறுவர் என தெரிகிறது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஜப்பான் இளம்பெண் தான் ட்வீட் செய்திருந்த வீடியோவை நீக்கிவிட்டார். மேலும், வீடியோவை நீக்கியது குறித்தும், ஹோலி அன்று நடந்த சம்பவம் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
அவரது ட்வீட்டில், "நான் மார்ச் 9ஆம் தேதி ஹோலி அன்று தனக்து நடந்த சம்பவம் பற்றி வீடியோவை பகிர்ந்திருந்தேன். அந்த வீடியோவுக்கு வந்த ரெஸ்பான்ஸ் எனது கற்பனைக்கு அப்பாற்பட்டது. பலரும் ரீட்வீட் செய்தும், கமென்ட் செய்தும், தனிப்பட்ட முறையிலும் குறுஞ்செய்தி அனுப்பினர். இந்திய இளைஞர்களால் பாதிக்கப்பட்ட என்னிடம் பல இந்தியர்கள் மனிப்புக்கோரினர். இதுபோன்ற அதிக எண்ணிக்கையிலான கமென்ட்டுகளைப் பார்த்து நான் பயந்துவிட்டேன். அதனால்தான் வீடியோவை நீக்கினேன்.
இந்தியாவில் ஹோலிப் பண்டிகை அன்று ஒரு பெண் தனியாக வெளியே செல்வது மிகவும் ஆபத்து என்று கேள்விப்பட்டேன். அதனால், நான் எனது 35 நண்பர்களுடன் ஹோலிப் பண்டிகையில் கலந்து கொண்டேன், ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவிவிட்டது.