டெல்லி :இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் யென் முதலீடு செய்ய உள்ளதாக ஜப்பான் முன்னாள் பிரதமர் யோஷிடே சுகா தெரிவித்து உள்ளார்.
இந்தியா மற்றும் ஜப்பான் தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்திய இந்தியா - ஜப்பான் வர்த்தக மாநாட்டில் ஜப்பான் முன்னாள் பிரதமர் யோஷிடே சுகா கலந்து கொண்டார். இந்தியாவில் ஜப்பானிய முதலீடுகளைத் ஈர்ப்பதற்காக அந்நாட்டை சேர்ந்த 100 உறுப்பினர்களைக் கொண்ட வணிகக் குழுவுக்கு தலைமையேற்று முன்னாள் பிரதமர் யோஷிடே சுகா இந்தியாவிற்கு வந்து உள்ளார்.
மாநாட்டில் பேசிய யோஷிடே சுகா, இந்தியாவுடனான ஈடுபாடு மற்றும் கூட்டாண்மையை மேம்படுத்துவது தொடர்பாக ஜப்பானில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடையே முழுமையான உடன்பாடு உள்ளதாக தெரிவித்தார். இந்தியா - ஜப்பான் இடையிலான பொருளாதார நட்புறவை மேம்படுத்தும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு பொது மற்றும் தனியார் துறைகளில் 5 டிரில்லியன் யென் (ஜப்பானிய பணம்) மதிப்பிலான முதலீடு மற்றும் கடன்கள் வழங்க உள்ளதாக யோஷிடே தெரிவித்தார்.
இந்தியப் பொருளாதாரத்தின் ஆற்றலை தன்னால் உணர முடிவதாகவும் பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பிறகு, இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் 5 டிரில்லியன் யென் மதிப்பிலான முதலீடுகளை செய்யும் நோக்கத்தை மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்தார்.
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறி உள்ளதாகவும், இப்போதும் கூட, இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார். மேலும் 2022 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 2 சதவீதம் என்ற உயர் மட்டத்தில் உள்ளதாகவும் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியா உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையாக மாறும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இந்தியாவின் வாழ்வாதாரத்தை தான் கண்டதாகவும் இந்தியப் பொருளாதாரத்தின் வேகத்தை நேரடியாக உணர முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஜப்பானின் பொது மற்றும் தனியார் துறைகள் இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து முழுமையான உடன்பாட்டில் உள்ளதாக தெரிவித்தார்.
இந்திய தொழில்துறையின் பிரதிநிதிகள் ஜப்பானில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்கி, இந்தியா - ஜப்பான் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிப்பார்கள் என நம்புவதாக தெரிவித்தார். தொழில்துறை பிரதிநிதிகளின் செயல்பாடுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளின் தூண்களாக இருக்கும் என்றார்.
கடந்த ஆண்டு இந்தியா - ஜப்பான் வருடாந்திர மாநாடு தற்போதைய ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா - ஜப்பான் இடையிலான ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சைபர் பாதுகாப்பு, பொருளாதார கூட்டாண்மை, கழிவு நீர் மேலாண்மை, நகர்ப்புற மேம்பாடு, சுத்தமான எரிசக்தி கூட்டாண்மை மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் இருந்து மூங்கில் சார்ந்த தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்... ராகுல், கார்கே தலைமையில் ஆலோசனை... சூடுபிடிக்கும் தேர்தல் களம்!