ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் வரும் கால் ஆண்டிற்குள் சட்டமன்றத் தேர்தலும், அதனைத் தொடர்ந்து பஞ்சாயத்து தேர்தலும், நகர்புற உள்ளாட்சித் தேர்தலும் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு ஜம்மூ காஷ்மீரில், சட்டமன்றத் தேர்தல் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 4 ஆயிரத்து 892 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அவர்களின் கால பணி நேற்றுடன் (ஜன.9) நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் சிறப்பு முகாம், இம்மாதம் 15ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக, அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து பேசிய ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் ஆணையர் பி.ஆர் ஷர்மா, “உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் இந்த சிறப்பு முகாம், இம்மாதம் 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறும். அதில், 2024 ஜனவரி 1ஆம் தேதியோடு 18 வயது நிரம்பும் அனைவரும் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும், இந்த வாக்காளர் சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக, திருத்தம் செய்வதற்கான 4 சிறப்பு முகாம்கள் ஜனவரி 27, 28 மற்றும் பிப்ரவரி 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும். திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் பிப்ரவி 26ஆம் தேதி வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.