டெல்லி: மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் நேற்று (மார்ச் 23) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, “காந்தியடிகள் சட்டப் படிப்பு பட்டம் பெற்றவர் என்ற தவறான கருத்து உள்ளது. ஆனால், மகாத்மா காந்தி ஒரு பல்கலைக்கழக பட்டம் கூட பெற்றதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
அவருடைய கல்வித் தகுதி என்பது உயர்நிலை பள்ளி, டிப்ளமோ படிப்பு மட்டுமே ஆகும். அவர் சட்டத்தை பயிற்சி பெற்று தன்னை தகுதியாக்கிக் கொண்டார். ஆனால், சட்டப் படிப்பு பட்டத்தை அவர் ஒருபோதும் பெறவில்லை. இந்த உண்மையை பலர் எதிர்க்கக் கூடும். மகாத்மா காந்தி எந்தவொரு முறையான சட்டப் படிப்பு பட்டத்தையும் பெறவில்லை என்பதே உண்மை. பட்டத்துக்கும் கல்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
காந்தியின் வாழ்க்கையில் உண்மை மட்டுமே மையப் புள்ளியாக இருந்தது. எந்த ஒரு சூழலிலும் அவர் அதனை (உண்மை) விடவில்லை. காந்தி, நாட்டுக்காக நிறைய செய்துள்ளார். எனவேதான் அவர் தேசத் தந்தையாக போற்றப்படுகிறார். நீங்கள் காந்தியின் வாழ்க்கையை எந்த கோணத்தில் பார்த்தாலும், அதில் அவரது வாழ்க்கையில் உள்ள உண்மை மட்டுமே வெளிப்படுத்தும்.