ஜம்மு & காஷ்மீர்:குப்வாரா மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 16) அதிகாலை பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கிடையே நடைப்பெற்ற துப்பாக்குச் சூட்டில் ஐந்து வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட இந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.
வடக்கு காஷ்மீர், குப்வாரா மாவட்டத்தில் (LoC - Line of Control) எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அல்லது கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் உள்ள ஜம்குண்டு என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. அப்போது நடைபெற்ற துப்பாக்குச் சூட்டில் ஐந்து வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
முன்னதாக ஜூன் 2 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. அப்போது பாதுகாப்புப் படையினரால் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பின், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்து உள்ளது. அதன் அடிப்படையில் வனப்பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் காவல்துறை அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.