டெல்லி:ஜல்லிக்கட்டு போட்டி, கருணை மற்றும் மனித நேயத்திற்கான சித்தாந்தங்களை மீறவில்லை என்றும், மிருகவதை தடைச் சட்டத்திற்கு எதிரானது இல்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வதிடப்பட்டது.
தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு, கர்நாடாக மாநிலத்தில் நடக்கும் கம்பாலா, மராட்டியத்தில் நடைபெறும் மாட்டு வண்டி பந்தையங்களில், விலங்குகள் துன்புறுத்தப்படுவதாகவும், அந்த போட்டிகளை தடை செய்யக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.
நீதிபதி ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன் மனு விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உள்ள நிலையில், ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில், அரசிய சாசனத்தின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பின்னரே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்கப்பட்டதாகவும், ஜல்லிகட்டு போட்டிக்கான அனுமதியில் எந்த விதிமீறலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.