சென்னை:நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானநிலையில் 25 நாட்களை கடந்தும் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இத்திரைப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 16 வசூல் சாதனைகளை படைத்துள்ளது.
இதுகுறித்து திரைப்பட வர்தக ஆய்வாளரான மனோபாலா விஜயபாலன், பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலரின் குறிப்பிடத்தக்க சாதனைகள் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் வெளியான 'ஜெயிலர்' படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும், தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வந்த நிலையில், ஒரே வாரத்தில் சுமார் 300 கோடிக்கு மேல் இப்படம் வசூல் சாதனை செய்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
ஜெயிலரின் சிறப்பான சாதனைகளில் ஒன்று, தமிழ்நாட்டின் ’ஆல் டைம் நம்பர் ஒன் தமிழ் திரைப்படம்’ என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. அதுமட்டும் மல்லாது அண்டை மாநிலங்களான, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தமிழ் திரைப்படங்களில் இரண்டாவது இடத்தையும், கேரளா மற்றும் கர்நாடகாவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது இது ரஜினிகாந்தின் பான்-இந்தியா இமேஜை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ரூ.50 கோடி வசூலைக் கடந்த முதல் தமிழ் திரைப்படம் ஜெயிலர் தான்.
ஜெயிலர் திரைப்படம் கடல் கடந்து சர்வதேச அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வட அமெரிக்காவில், நம்பர் ஒன் தமிழ் திரைப்படமாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதே போல் மலேசியா, சவூதி அரேபியா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், சிங்கப்பூர் மற்றும் பிரான்சில் தமிழ் திரைப்படங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.