ஹைதராபாத்: சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் மக்கள் கூட்டம் கரைபுரண்ட நிலையில், ஜெயிலர் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக மீண்டும் ரஜினிகாந்த் முத்திரை பதித்து உள்ளார். படம் ரிலீசாகி 6 நாட்களை தாண்டிய நிலையில், பல்வேறு இடங்களில் ஹவுஸ் புல் காட்சிகளுடன் ஓடி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோரும் கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள ஸ்டார் மோகன் லால் ஆகியோரும் சிறப்பு தோற்றங்களில் நடித்தனர்.
முதலில் தமன்னா நடனத்தில் காவாலா பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதோடு ரசிகர்கள் மத்தியில் படத்துக்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து வெளியான டைகர் ஹூக்கும் பாடலும் பட்டித் தொட்டி எங்கும் பரவி ஹிட் அடித்தது. படம் வெளியான இரண்டே நாட்களில் இந்திய அளவில் 100 கோடி வரை வசூலித்த இப்படம் உலக அளவில் 200 கோடியை தாண்டியதாக கூறப்பட்டது.
மேலும், ஜெயிலர் படம் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் 48 கோடியே 35 லட்ச ரூபாயும், இரண்டாவது நாளில் 25 கோடியே 75 லட்ச ரூபாயும், மூன்றாவது நாளில் 35 கோடி ரூபாயும் வசூலானதாக தெரிவிக்கப்பட்டது.