ஆந்திரப் பிரதேசம்:முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா விவேகானந்த ரெட்டி. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில் உள்ள தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அவரை தாக்கி படுகொலை செய்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள், பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்தன.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த சிபிஐ அதிகாரிகள், விவேகானந்த ரெட்டி தொடர்பான அனைத்து தகவல்களையும் திரட்டி தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவரின் உறவினர்கள், பணியாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது புதிய திருப்பமாக இந்த கொலைக்கும் ஆந்திரபிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் தொடர்பு இருக்கலாம் என சிபிஐ அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்ட அன்று காலை 6.15 மணியளவில் அவரது உதவியாளர் எம்.வி. கிருஷ்ணா ரெட்டி ஜெகன் மோகன் ரெட்டிக்கு தகவல் தெரிவித்த நிலையில், அதற்கு முன்பே இந்த கொலை குறித்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு தெரியும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அதேநேரம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தனது சித்தப்பா படுகொலை செய்யப்பட்டது குறித்து தகவல் கிடைத்தது எப்படி என்றும், அதை யார் அவரிடம் தெரிவித்தார்கள் என்றும் தெரிவிக்க வேண்டியதன் அவசியம் என்ன எனவும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்ட அன்று காலை 4.11 மணி அளவில் கடப்பா நாடாளுமன்ற உறுப்பினர், ஒய்எஸ் அவினாஷ் ரெட்டி தனது வாட்ஸ் அப்பில் ஆக்டிவாக இருந்துள்ளார் என தெரிவித்துள்ள சிபிஐ அதிகாரிகள், கொலை வழக்கின் இரண்டாவது குற்றவாளி எனக் கூறப்படும் சுனில் யாதவ், விவேகா கொல்லப்பட்ட அன்று நள்ளிரவுக்குப் பிறகு அதாவது சுமார் 1.58 மணிக்கு அவினாஷ் ரெட்டியின் வீட்டில் இருந்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அதுமட்டுமின்றி அந்த நேரத்தில் எம்.பி அவினாஷின் வாட்ஸ் அப்-ல் இருந்து வாய்ஸ் கால்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு சந்தேகங்களையும் இணைத்து அதாவது ஜெகன் மோகன் ரெட்டி முன்கூட்டியே தகவல் கிடைத்தது எப்படி? காலை 4.11 மணியளவில் அவினாஷ் ரெட்டியின் வாட்ஸ் அப் பயன்பாட்டில் இருந்தது ஆகியவைகளை முன்வைத்து சிபிஐ அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கவுள்ளனர்.
மேலும் இது குறித்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள சிபிஐ, இத்தனை தகவல்களையும் முன்வைத்து அவினாஷ் ரெட்டிக்கு ஜாமீன் வழங்க கூடாது எனவும் கோரியுள்ளது. தேர்தல் நேரத்தில் கொலை செய்யப்பட்ட விவேகானந்த ரெட்டியின் கொலையில் பல மர்மங்கள் ஒளிந்திருக்கும் நிலையில் ஒவ்வொன்றாக அவிழ்த்து வரும் சிபிஐ அதிதாரிகளின் அடுத்த விசாரணை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தற்போது கடப்பா எம்.பி அவினாஷிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தின் அனுமதி கோரியுள்ளது சிபிஐ. மேலும், தனது தாயின் உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி அவினாஷ் ரெட்டி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்! 24 பேர் அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!