ஸ்ரீநகர் : ஒன்றிய அரசுக்கு எதிராக கடுமையான தாக்குதலைத் தொடங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, ஜம்மு -காஷ்மீர், டெல்லியில் இருந்து நேரடியாக "தாக்குதலுக்கு உள்ளாகிறது" என்றார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக காஷ்மீருக்கு சென்றுள்ளார்.
அங்கு ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போது, ஜம்மு -காஷ்மீர் மட்டுமின்றி தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களையும் மத்திய அரசு தாக்குகிறது. ஆனால் ஜம்மு -காஷ்மீர் நேரடி தாக்குதலில் உள்ளது, மற்ற மாநிலங்கள் மறைமுகமாக தாக்கப்படுகின்றன.
ஜம்மு -காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மீட்டெடுப்பது துரிதப்படுத்தப்பட வேண்டும். சட்டப்பேரவை தேர்தல் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்” என்றார்.
இதைத் தொடர்ந்து குலாம் நபி ஆசாத்தின் கோரிக்கைக்கு பதிலளித்த அவர், “நான் நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை. ரஃபேல், வேலையின்மை மற்றும் ஊழலுக்கு எதிராக என்னால் பேச முடியாது. அவர்கள் (பாஜக) நீதித்துறை, மக்களவை மற்றும் ஊடகங்களை கூட குழப்பிவிட்டனர்.