டெல்லி: இந்தியா-சீனா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஏழாவது ஆண்டு சர்வதேச யோகா நாளை முன்னிட்டு, இன்று பனிமூடிய இமயமலை சிகரத்தில் 18,000 அடி உயரத்தில் யோகா செய்தனர்.
ஆண்டுதோறும், இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் லடாக்கில் 13,000 முதல் 18,000 அடி வரை வெவ்வேறு உயரமான எல்லை புறக்காவல் நிலையங்களில் யோகா செய்கிறார்கள்.
இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் இந்தியாவின் ஐந்து மத்திய ஆயுத காவல் படைகளில் ஒன்றாகும், இது சீனாவின் திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் இந்தியாவின் எல்லையைக் கண்காணிக்கும் எல்லை ரோந்து அமைப்பாகும்.
இமாச்சலில் 16,000 அடி உயரத்திலும், லடாக்கின் பாங்காங் திசோ ஏரி கரையில் 14,000 அடி உயரத்திலும் யோகா செய்தனர்.
லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கின் அருகிலும் யோகா நிகழ்த்தினர். இந்த இடத்தில் கடந்தாண்டு ஜூன் 15இல் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதல்களில் இந்திய பாதுகாப்புப் படையினர் 20 பேர் வீர மரணம் அடைந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
இந்திய எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் லடாக்கில் உள்ள கரகோரம் பாஸ் முதல் அருணாச்சலப் பிரதேசத்தின் ஜாச்செப் லா வரையிலான பகுதிகளை பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுவருகின்றனர். இது இந்தோ-சீனா எல்லையில் 3,488 கிமீ.
சீன-இந்திய எல்லையின் மேற்கு, மத்திய, கிழக்குப் பகுதிகளில் 9,000 முதல் 18,800 அடி வரை உயரத்தில் எல்லைப் புறக்காவல் நிலையங்களையும் சிறப்புப் படை நிர்வகிக்கிறது.
தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில் யோகா ஒரு முக்கியமான செயலாகப் பார்க்கப்படுகிறது, ஏனெனில் அதன் நடைமுறை உடல், உணர்ச்சி நல்வாழ்வுக்கு வழிவகுக்கிறது. மேலும் ஆபத்தான நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்கான திறனை அதிகரிக்கிறது.