ஸ்ரீஹரிகோட்டா: பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடியாக விளங்குவது, சூரியன். சூரியனின் ஒளி இல்லை என்றால் உலகமே ஸ்தம்பித்துவிடும் என்பது நிதர்சனமான உண்மை. அப்படிப்பட்ட சூரியன் குறித்து ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள நாசா (NASA) ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது இந்தியா சார்பில் இஸ்ரோவும் (ISRO) இந்த ஆய்வு களத்தில் இறங்கியுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2023 செப்டம்பர் 2ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) இருந்து அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் சூர்ய ஆய்வு விண்கலமான ஆதித்யா எல்-1 விண்கலம், இன்று மாலை 4 மணிக்கு தனது இலக்கை அடையத் தயாராக உள்ளது என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறியதாவது, “ஆதித்யா எல்1 விண்கலம் பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியன் - பூமிக்கு இடையேயான அமைப்பின் லாக்ரேஞ்ச் புள்ளி 1 (எல்-1)-ஐ சுற்றி உள்ள ஒரு சுற்றுப்பாதையில் நிறுத்தப்படும். எல்-1 புள்ளி என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள மொத்த தூரத்தில் 1 சதவீதம் ஆகும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் (SDSC) 2வது ஏவுதளத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி ஆதித்யா எல்-1 விண்கலம், தற்போது சுமார் 3.7 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் கடந்துள்ளது" என தெரிவித்தார்.
மேலும் இது குறித்து இஸ்ரோ கூறியதாவது, “ஆதித்யா எல்-1 சூரியனின் முழு வட்டின் அழகிய புகைப்படங்களை எடுக்கத் துவங்கியுள்ளதால், அறிவியல் முடிவுகள் ஏற்கனவே வரத் துவங்கியுள்ளது. மேலும், எல்1 புள்ளி ஒளிவட்டப்பாதையில் உள்ள செயற்கைக்கோள், சூரியனின் மறைவுகள் மற்றும் கிரகணங்கள் இல்லாமல் தொடர்ந்து கண்காணிப்பது முக்கியமாகும். சூரியனின் செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலை நிலவரம் ஆகியவற்றின் தாக்கத்தை, சரியான நேரத்தில் கவனிப்பது இன்னும் நன்மையாகும்" என தெரிவித்துள்ளது.
தற்போது இந்த ஆதித்யா எல்-1 விண்கலமானது 63 நிமிடங்கள், 20 வினாடிகளுக்குப் பிறகு பூமியின் 235x19500 கிலோ மீட்டர் நீள்வட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அதன்பிறகு, தொடர்ச்சியான சூழ்ச்சிகளுக்கு உட்பட்டு, பூமியின் செல்வாக்கு மண்டலத்தில் இருந்து சூரியன் - பூமி லாரேஞ்ச் புள்ளி 1 (எல்1)-ஐ நோக்கி பயணித்து வந்தது.
அதனைத் தொடர்ந்து சுமார் 125 நாட்கள் பயணத்தை நிறைவு செய்துள்ள ஆதித்யா எல் 1, இன்று மாலை தனது இலக்கான எல்-1 புள்ளியை வெற்றிகரமாகச் சென்றடையும். பின்னர் செங்குத்தான சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு சூரியன் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.
ஆதித்யா எல்-1-இன் முக்கிய அறிவியல் நோக்கங்கள்:
- சூரிய மேல் வளிமண்டல (குரோமோஸ்பியர் மற்றும் கரோனா) இயக்கவியல் பற்றிய ஆய்வு.
- குரோமோஸ்பிரிக் மற்றும் கரோனல் வெப்பமாக்கல், பகுதியளவு அயனியாக்கம் செய்யப்பட்ட பிளாஸ்மாவின் இயற்பியல், பெரும்பான்மையான கரோனல் வெளியேற்றங்களின் துவக்கம் மற்றும் எரிப்பு பற்றிய ஆய்வு.
- சூரியனிலிருந்து துகள் இயக்கவியல் பற்றிய ஆய்வுக்கான தரவை வழங்குமிடத்தில் உள்ள துகள் மற்றும் பிளாஸ்மா சூழல் கவனிப்பு.
- சூரிய கரோனாவின் இயற்பியல் மற்றும் வெப்பமூட்டும் வழிமுறை.
- கரோனல் மற்றும் கரோனல் லூப்ஸ் பிளாஸ்மாவின் கண்டறிதல் (அதாவது, சூரியனின் வெப்பநிலை, வேகம் மற்றும் அடர்த்தி)
- கரோனல் மாஸ் எஜெக்சன்களின் (CMEs) வளர்ச்சி, இயக்கவியல் மற்றும் தோற்றம்.
- பல அடுக்குகளில் குரோமோஸ்பியர், பேஸ் மற்றும் நீட்டிக்கப்பட்ட கரோனா நிகழும் செயல்முறைகளின் வரிசையை அடையாளம் காணவும், இறுதியில் சூரிய வெடிப்பு நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது.
- சூரிய கரோனாவில் காந்தப்புல இடவியல் மற்றும் காந்தப்புல அளவீடுகள் பற்றிய ஆய்வு.
- விண்வெளி வானிலைக்கான இயக்கிகள் (சூரிய காற்றின் தோற்றம், கலவை மற்றும் இயக்கவியல்).
இதையும் படிங்க:"திறன் மேம்பாட்டு பயிற்சியில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது" - யுஜிசி தலைவர் ஜெகதீஸ்குமார் பாராட்டு!