ஹைதராபாத்:நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னர், இந்த விண்கலம் கடந்த 5ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது.
அதன் பிறகு, சுற்றுப்பாதையின் உயரத்தை படிப்படியாக குறைத்து, நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதன்படி கடந்த 14ஆம் தேதி மூன்றாவது முறையாக சுற்றுப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டு, நிலவிலிருந்து குறைந்தபட்சம் 150 கிலோ மீட்டர் மற்றும் அதிகபட்சம் 177 கிலோ மீட்டர் தொலைவில் விண்கலம் பயணித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 16ஆம் தேதி நான்காவது முறையாக நிலவின் சுற்றுப்பாதை உயரம் குறைக்கப்பட்டது.
கடந்த 17ஆம் தேதி நிலவின் மேற்பரப்பிலிருந்து 153 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும்போது, சந்திரயானின் உந்துவிசை கலனிலிருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. பின்பு உந்துவிசை கலன், லேண்டர் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக நிலவை ஒட்டிய சுற்றுவட்டப்பாதையில் பயணித்தன. நேற்று(ஆகஸ்ட் 20) இறுதியாக சுற்றுப்பாதை உயரம் குறைக்கப்பட்டது. இதையடுத்து, நிலவின் மேற்பரப்பிற்கு மிகவும் நெருக்கமாக அதாவது குறைந்தபட்சம் 25 கிலோ மீட்டர், அதிகபட்சம் 134 கிலோ மீட்டர் கொண்ட சுற்றுப்பாதைக்கு லேண்டர் கொண்டு செல்லப்பட்டது.