ஹைதராபாத்: கடந்த ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக ஆந்திராவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் நிலவில் காலூன்றியது. இதன் மூலம், நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சென்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்தது. இதனையடுத்து, சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரும் பிரிந்து சென்று தனது ஆய்வுப் பணியைத் தொடங்கியது.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்த பிரதமர் மோடி, இன்று இஸ்ரோ மையத்திற்கு வந்து சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திராயன் 3 விண்கலத்தின் செயல்திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்ட அனைத்து விஞ்ஞானிகளையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல், நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த இடம் ‘சிவசக்தி’ (Shivshakti) என்றும், ஆகஸ்ட் 23 அன்று இனி தேசிய விண்வெளி தினம் (National Space Day) கொண்டாடப்படும் எனவும் பிரதமர் அறிவித்தார். இந்த நிலையில், ஒரு பக்கம் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவரின் பணிகளை உன்னிப்பாக கவனித்து வரும் இஸ்ரோ, தனது அடுத்த இலக்கை நோக்கியும் தனது பணியைத் தொடங்கி உள்ளது.
அந்த வகையில், இஸ்ரோ அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 (Aditya-L1) என்ற விண்கலத்தை செலுத்த தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் விண்வெளி அமைப்பில் இருந்து இந்தியாவில் இருந்து முதன் முறையாக சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பப்பட உள்ளது.
இந்த விண்கலத்தின் மூலம் சூரியனில் இருந்து எல் 1-ஐச் சுற்றி உள்ள வட்டப்பாதையை ஆய்வு செய்ய முடியும். இந்த விண்கலம் சூரியனின் போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் உள்பட பல்வேறு அலைவரிசைகளை ஆய்வு செய்வதற்காக 7 பேலோடுகளை சுமந்து செல்ல இருப்பதாகவும் தெரிகிறது. இந்த ஏழு பேலோடுகளில் 4 சூரியனை நேராக பார்க்கவும், மற்ற 3 பேலோடுகளை எல் 1 சுற்றுவட்டப் பாதையில் உள்ள துகள்களைப் பற்றி ஆராயவும் உதவும்.