தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

chandrayaan 3: உலகம் உற்றுநோக்கும் இந்திய சரித்திரம்.. சந்திரயான் - 3 குறித்த முழு விபரம்!

இந்திய மக்கள் அனைவரது எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விண்ணை நோக்கி பறக்கவுள்ளது சந்திரயான் 3 விண்கலம். அதற்கான கவுண்டவுன் தொடங்கியுள்ள நிலையில் சந்திரயான் குறித்த பத்து முக்கிய தகவல்களை பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 13, 2023, 4:31 PM IST

Updated : Jul 14, 2023, 1:08 PM IST

சந்திராயன் - 3 குறித்த முழு விபரம்!

பெங்களூரு: சந்திராயன் 1 மற்றும் சந்திராயன் 2 ஆகிய விண்கலன்களை தொடர்ந்து தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த இலக்காக இந்தியா, சந்திராயன் 3-ஐ ஏவ தயாராகியுள்ளது. நாளை அதாவது ஜூலை 14ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த விண்கலம் சந்திரனை நோக்கிப்பறக்கவுள்ளது.

இந்திய நேரப்படி பிற்பகல் 2.35க்கு சந்திராயன் 3-ஐ விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் அதற்கான இறுதிக்கட்ட பணிகளின் தீவிரம் காட்டி வருகின்றனர். சரி இந்த சந்திராயன் 3-ன் சிறப்புகள் என்ன? அது பூமியில் இருந்து நிலவுக்கு பயணிக்கும் நிகழ்வு எப்படி இருக்கும்? இந்த விண்கலம் நிலவில் எப்படி தரையிறங்கி தனது பணியை மேற்கொள்ளவுள்ளது என்பதை பார்க்கலாம்.

சந்திராயன் 3-ன் சிறப்புகள்:சந்திராயன் 2-ல் ஏற்பட்ட சில தோல்விகளை சரி செய்து அதனுடன் மேலும் பல தொழில்நுட்ப செயல்பாடுகளை உறுதி செய்து சந்திராயன் 3 விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த சந்திராயன் 3-ன் முதன்மையான நோக்கம் நிலவின் மேற்பரப்பில் லேண்டரை சாஃப்ட் லேண்டிங் மூலம் தரையிறக்கி, அங்கு ரோவர் எனப்படும் சிறிய வகை ரோபோ மூலம் ஆய்வு செய்வது தான் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கியவுடன் 6 சக்கரங்களை கொண்ட ரோவரை வெளியே அனுப்பி, சந்திரனில் தனது பணியை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி தரையிரங்கும் ரோவர், சந்திரனின் மேற்பரப்பை வரைபடமாக மாற்றி பூமிக்கும் அனுப்பும் எனவும், நிலவின் வெளிப்புறம் எப்படி இருக்கிறது அதன் வடிவம் உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, இந்த ரோவர் நிலவில் உள்ள புவியியல், கனிம வளம் மற்றும் கலவை பற்றிய விலைமதிப்பற்ற அறிவியல் பூர்வமான தரவுகளை சேகரிக்கவுள்ள நிலையில், நிலவில் நீர்மூலக்கூறுகள் இருப்பதை ஆராய்வது உள்ளிட்ட பல்வேறு தரவுகளை சேகரித்து வழங்கவுள்ளது. மேலும், சந்திரனின் பரிணாமம், அதன் புவியியல் செயல்முறைகள் மற்றும் எதிர்கால மனிதப் பணிகளுக்கான ஆதாரம், அதன் திறனைப் பற்றிய மனிதர்களின் புரிதல் உள்ளிட்டவை இதன் மூலம் மேம்படும் என நம்புவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

14ம் தேதி சந்திரயான் ஏவப்படுவது முதல் லேண்டர் சந்திரனில் தரையிறங்குவது வரையிலும் 45 நாட்கள் ஆகின்றன. இந்த நாட்களில் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வுகளை 10 கட்டங்களாக பிரிக்கலாம்.

முதல் கட்டம்: எல்.வி.எம் 3 ராக்கெட், பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ உயரத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தைக் கொண்டு சென்று நிறுத்தும்.

இரண்டாம் கட்டம்: விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ உயரத்திற்குச் சென்றதும் அதற்கு ஒரு உந்துதல் வழங்கப்பட்டு புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைப்பார்கள் இது இரண்டாம் கட்டம்.

மூன்றாம் கட்டம்:அதனை தொடர்ந்து விண்கலத்தை நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு கொண்டு செல்ல, ஏற்கனவே புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் அந்த விண்கலத்தை, பூமிக்கு நெருக்கமான தூரத்தில் இருந்து, நெடுந்தொலைவுக்கு செல்ல உந்துதல் கொடுக்கப்படும். இதை Orbit raising என்பார்கள். இந்த Orbit raising என்பது விண்கலம் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தில், அதாவது 170 கி.மீ தொலைவுக்கு வரும்போதெல்லாம் ராக்கெட்டை எரித்து உந்துவிசை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். தொடர்ந்து 20 நாட்கள் இப்படி உந்துவிசை கொடுக்கப்படும்.

நான்காம் கட்டம்:பூமிக்கும் நிலவுக்கும் இடையே சம ஈர்ப்பு விசைப் புள்ளி ஒன்று உள்ளது அந்த புள்ளியில் விண்கலத்தை நிறுத்த வேண்டும். அதாவது நிலவில் இருந்து சுமார் 62,630 கி.மீ தொலைவில் இருக்கும் அந்த புள்ளியில் விண்கலத்தை நிறுத்துவதுதான் நான்காவது கட்டம்.

ஐந்தாம் கட்டம்:ஆனால் அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.. மிக துல்லியமான கணிப்பின் மூலம் மட்டுமே இந்த வேலையை கையாள முடியும். சற்று தவறினாலும், விண்கலம் பாதை மாறி சென்றுவிடும். இதை சரியாக கையாளுவதே ஐந்தாம் கட்டம்.

ஆறாம் கட்டம்:அந்த சம ஈர்ப்புவிசைப் புள்ளிக்குச் சென்ற விண்கலம் புவி ஈர்ப்பு விசையில் இருந்து நிலவின் ஈர்ப்பு விசை பிடிக்கு செல்ல உந்துதல் கொடுக்கப்படும் இதுதான் ஆறாம் கட்டம்.

ஏழாம்கட்டம்:நிலவின் ஈர்ப்பு விசைக்குள் வந்த சந்திரயான் 3 விண்கலத்தை நிலவின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைக்கவேண்டும் இதுதான் ஏழாம்கட்டம். அப்படி சுற்றவைக்கவில்லை என்றால், நிலவுக்கு அருகில் சென்ற விண்கலம் அங்கிருந்து விலகி விண்வெளிக்கு சென்றுவிடும்.

எட்டாம் கட்டம்:அந்த நேரத்தில் விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப் பாதையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிசெய்து, நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100கி.மீ தொலைவில் விண்கலத்தைக் கொண்டு வந்து நிறுத்தவேண்டும். அப்படிக் கொண்டுவந்து, அதே தொலைவில் நிலவைச் சுற்றி வட்டமாகச் சுற்ற வைப்பதுதான் எட்டாவது கட்டம்.

ஒன்பதாவது கட்டம்:ஏற்கனவே எடுத்துக்கொண்ட எட்டுக்கட்டங்களின் வெற்றியை தொடர்ந்துதான் 9ஆம் கட்டத்திற்கு நுழைய முடியும். இது நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கும் சவாலான கட்டம். இதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் 15 நிமிடங்கள் மட்டுமே ஆனால் இந்த முழு திட்டத்தின் வெற்றி தோல்வி ஆகிய இரண்டையும் தீர்மானிப்பது இந்த ஒன்பதாவது கட்டம்தான். சந்திராயான் 2 திட்டம் தோல்வி அடைந்தது இந்த 9வது கட்டத்தை விஞ்ஞானிகள் செயல்படுத்தும்போதுதான். விண்கலம் நிலவிற்கு சென்றவுடன் உந்துகலம் மற்றும் தரையிரங்கி கலம் (Lander) இரண்டும் பிரிந்து அந்த தரையிரங்கி கலத்தை அதிகபட்சமாக 100 கி.மீ முதல் குறைந்தபட்சமாக 30 கி.மீ வரை நீள்வட்டப் பாதையில் செலுத்தப்படும்.

பத்தாம்கட்டம்:இறுதியாக, தரையிறங்கி கலத்தின் உள்பகுதியில் இருக்கும் ஊர்திக்கலத்தை (Rover) வெளியே வரவழைத்து நிலவின் தரையில் இறக்கி இயங்கச்செய்ய வேண்டும். அதற்கு, தரையிறங்கி கலம் நிலவின் தரையில் இறங்கியதும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று சாய்வுப் பலகையைப் போல் திறந்து கீழ்நோக்கி இறங்கும். அந்த சாய்வுப் பலகையின் வழியே உருண்டு இறங்கி, நிலவின் தரையில் தடம் பதிக்கும் ஊர்திக்கலம் தனது வேலையைத் தொடங்கும். இதுதான் பத்தாம் கட்டம்.

இதையும் படிங்க:Chandrayaan-3 : ஒருநாள் நிலவு ஆராய்ச்சிக்கு இத்தனை கோடி செலவா? சந்திரயான்-3 முழுத் தகவல்!

Last Updated : Jul 14, 2023, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details