கொச்சி(கேரளா): இஸ்ரோவில் உளவு பார்த்ததாக, பொய்யாக ஜோடிக்கப்பட்டு விஞ்ஞானி நம்பி நாராயணனை துன்புறுத்திய முன்னாள் கேரள மாநில காவல் துறையினர் இருவருக்கு இரண்டு வாரங்கள் இடைக்கால பிணை வழங்கி, அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விஞ்ஞானி நம்பி நாராயணன் துன்புறுத்தப்பட்ட வழக்கில், சிபிஐ மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், இந்தப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த பிணை வழக்கை விசாரித்த தனி நபர் நீதிபதி அமர்வு, முன்னாள் காவல் துறையினரான எஸ். விஜயன் மற்றும் தம்பி எஸ்.துர்கா தத் ஆகிய இருவரையும் சிபிஐ கைது செய்து விசாரித்து வருவதால் மீண்டும் அவர்களை வேறு ஒரு வழக்கில் கைது செய்யக்கூடாது என்று கூறி, இன்று நீதிமன்றத்தில் ஆஜரான இருவருக்கும் இரண்டு வாரகால பிணை வழங்கி உத்தரவிட்டது.
கடந்த மாதம் முதல் நடைபெறும் விசாரணை
இவ்வழக்கில் முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளியாக கருதப்படும் காவல் துறை முன்னாள் அலுவலர்களான எஸ். விஜயன் மற்றும் தம்பி எஸ். துர்கா தத் ஆகிய இருவர் மீதும், கடந்த மாதம் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டு, திருவனந்தபுரம் தலைமை மாஜிஸ்திரேட் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.