திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) வாயுக்களை திரவமாக்கி அவற்றை எரிபொருளாக மாற்றும் கிரயோஜெனிக் தொழில்நுட்ப விண்வெளி அறிவியலாளராக பணியாற்றி வந்தார் நம்பி நாராயணன். 1994ஆம் ஆண்டில் இஸ்ரோ மையத்தை வேவு பார்த்து, கிரயோஜெனிக் ராக்கெட் என்ஜின் தயாரிப்பு உள்ளிட்ட சில முக்கிய ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றதாக நம்பி நாராயணன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில், நம்பி நாராயணனை கைது செய்து, கேரள காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், ஏறத்தாழ இரண்டு மாதங்கள் நம்பி நாராயணன் சிறையில் இருந்தார். இதற்கிடையே, இந்த வழக்கு, மத்திய குற்றப்புலனாய்வு அமைப்புக்கு (சி.பி.ஐ) மாற்றப்பட்டது. சி.பி.ஐ விசாரணையில், நம்பி நாராயணன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கண்டறியப்பட்டது.
நம்பி நாராயணன் பல்வேறு சட்டப்போராட்டம் நடத்திய பிறகு, அவர் மீதான குற்றச்சாட்டை 1996ஆம் ஆண்டு சிபிஐ தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து 1998 ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் நம்பி நாராயணன் நிரபராதி எனத் தீர்ப்பளித்தது. பின்னர் மீண்டும் இஸ்ரோவில் இணைந்து பணியாற்றிய நம்பி நாராயணன் 1999ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.