ஹைதராபாத்: நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகளும் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவைகள் நிலவின் வெவ்வேறு துருவங்களில் விண்கலத்தை அனுப்பு ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நாடும் கால் பதிக்காத, சவாலாக இருந்த நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய சந்திரயான் - 3 விண்கலம் கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
சந்திரயான் - 3 விண்கலம் 10 கட்டங்களாகப் பயணித்து நிலவைச் சென்றடைந்து, பின் விண்கலத்தின் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. இதனால் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்னும் பெருமை மிகுந்த சரித்திர சாதனையை இந்தியா பெற்றது.
அதன் பின் சந்திரயான் -3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய நிலையில், அதில் இருந்து பிரிந்த ரோவர் தனது ஆய்வுப் பணிகளை தொடங்கியது. ரோவர் பிரக்யான் நடத்திய ஆய்வில் அப்பகுதியில் சல்பர் இருப்பதை இஸ்ரோ உறுதி செய்தது. பிரக்யானில் உள்ள ஆல்பா பார்ட்டிகல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் (APXS) கருவி நிலவில் தெற்கு பகுதியில் சல்பர் மற்றும் வேறு சில தனிமங்கள் இருப்பதை உறுதி செய்தது.
LIBS கருவியானது நிலவில் ஆய்வு செய்து அலுமினியம் (Al), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr) மற்றும் டைட்டானியம் (Ti) ஆகிய தனிமங்கள் நிலவின் மேற்பரப்பில் இருப்பதையும் மேலும் மாங்கனீசு (Mn), சிலிக்கான் (Si) மற்றும் ஆக்ஸிஜன் (O) இருப்பதை இஸ்ரோ உறுதிப்படுத்தியது.
அதைத் தொடர்ந்து (செப்.2) இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில், சந்திராயன்-3 திட்டத்தின் படி பிரக்யான் ரோவர் தனது பணிகளை முடித்துள்ள நிலையில், தற்போது தூங்கும் நிலைக்கு (Sleeping Mode) மாற்றப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 22, 2023 அன்று சூரிய உதயம் ஆன பின்பு பிரக்யான் ரோவர் மீண்டும் வெற்றிகரமாக ஆன் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது.