பெங்களூரு:அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே இதுவரையில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள நிலையில், அந்த வரிசையில் இந்தியாவும் இடம் பெற மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ.
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ ஆதித்யா எல்1 திட்டத்தைச் செயல்படுத்தியது. அதைத்தொடர்ந்து தொடர்ந்து தற்போது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த திட்டத்தை இன்னும் 2 ஆண்டுகளில், அதாவது 2025ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இதனை 3 கட்டங்களாக மாதிரி விண்கலத்தை வைத்து சோதனை நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். அதன் முதல் கட்ட சோதனையாக மாதிரி விண்கலம் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
தரையில் இருந்து சுமார் 17 கிலோ மீட்டர் உயரத்தில் ராக்கெட்டில் இருந்து மாதிரி விண்கலம் வெற்றிகரமாக தனியாக பிரிந்தது. ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் பாராசூட்டுகள் மூலம் மிதந்து கொண்டு இருந்த மாதிரி விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
கடற்பகுதியில் தரையிறங்கிய விண்கலத்தை இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைத்தனர். இது குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறுகையில், "ககன்யான் மாதிரி விண்கலம் நேற்று (அக்.21) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிகளவில் எதிர்பார்க்கப்படும் ககன்யான் விண்கலத்தில் சோதனைக்காக பெண்மனித ரோபோவை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.