ஐதராபாத் :விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவில் உலாவி வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
யாரும் இதுவரை சென்றிராத நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் கடந்த ஜூலை 14ஆம் தேதில் நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. பூமி மற்றும் நிலவின் சுற்றுப்பாதைக்குள் பல்வேறு கட்ட அடுக்குகளில் நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது.
இதன் மூலம் சர்வதேச அளவில், நிலவில் அமைதியான முறையில் விண்கலத்தை தரையிறக்கிய 4வது நாடு என்கிற பெருமையையும், தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற வரலாற்று சிறப்பையும் இந்தியா பெற்றது. படிப்படிப்பாக லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்ட நிகழ்வை தென் ஆப்ரிக்காவில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி, இஸ்ரோ குழுவினருடன் இணைந்து பார்த்தார்.
நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் முதலில் அங்கு ஏற்பட்ட புழுதி காற்றில் நிலை குழையாமல் இருக்க சற்று அமைதியான நிலையில் இருந்தது. தொடர்ந்து 10 மீட்டர் உயரத்தில் இருந்து விக்ரம் லேண்டர் கீழே போடப்பட்டதால் நிலவில் இருந்து எழும் புழுதி அடங்கும் வரை விக்ரம் லேண்டர் எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
புழுதி முழுவதும் அடங்கிய பிறகு, விக்ரம் லேண்டரின் வயிற்று பகுதி மெல்ல திறக்கப்பட்டு அதனுள் இருந்த பிரக்யான் ரோவர் வெளியே கொண்டு வரப்பட்டதாகவும், தற்போது நிலவின் மேற்பரப்பில் உலா வரம் பிரக்யான் ரோவர், அதன் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
இது குறித்து இஸ்ரோ தன் X (ட்விட்டர்) பக்கத்தில், நிலவுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சந்திரயான் 3 ரோவர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. மேலும் இந்தியா நிலவில் உலாவி வருகிறது என பதிவிட்டு உள்ளது. விரைவில் அடுத்த பணிகளில் பிரக்யான் ரோவர் ஈடுபடும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க :பிரக்யான் ரோவரின் அடுத்த நடவடிக்கை என்ன? விக்ரம் லேண்டர் என்னாகும்! முழுத் தகவல்!