பெங்களூரு : ஆதித்யா எல்1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை 3வது முறையாக உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது. கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
புவி சுற்றுவட்ட பாதையில் ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக நிலை நிறுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதை அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்த்தி கொண்டு முயற்சியில் தொடரந்து ஈடுபட்டு வருகிறது. அதன் காரணமாக கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி முதல் சுற்றுவட்டப்பாதையில் ஆதித்யா எல்1 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.
தொடர்ந்து செப்டம்பர் 5ஆம் தேதி இரண்டாவது சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள் உயர்த்தப்பட்டது. மூன்றாவது கட்டமாக இன்று (செப். 10) மீண்டும் ஆதித்யா எல்1 விண்கலம் மீண்டும் புவி சுற்று வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. தற்போது 282*40225 கிலோ மீட்டர் என்ற சுற்றுவட்ட பாதையில் ஆதித்யா எல்1 விண்கலம் சீராக இயங்கி வருவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்து உள்ளது.