ஹைதராபாத்:இது தொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ வெளியிட்டு உள்ள ‘X' வலைதளப் பதிவில், “அனாக்லிப் என்பது ஸ்டீரியோ அல்லது மல்டி-வியூ படங்களில் இருந்து முப்பரிமாணங்களில் குறிப்பிட்ட பொருள் அல்லது நிலப்பரப்பின் எளிய காட்சிப்படுத்துதல் ஆகும். பிரக்யான் ரோவரில் எடுக்கப்பட்ட இடது மற்றும் வலது படத்தைக் கொண்ட நேவியேஷன் கேமரா, ஸ்டீரியோ படங்களைப் பயன்படுத்தி அனாக்லிப்பை உருவாக்கி உள்ளது.
இந்த 3டி படத்தில், இடது பக்கம் சிவப்பு சேனலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில், வலது பக்கம் நீலம் மற்றும் பச்சை சேனல்களில் வைக்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களுக்கு இடையேயான கண்ணோட்டத்தில் உள்ள வேறுபாடு ஸ்டீரியோ விளைவை ஏற்படுத்துகிறது. இது மூன்று பரிமாணங்களின் காட்சித் தோற்றத்தை அளிக்கிறது.
இந்த புகைப்படத்தை 3டி-இல் பார்க்க சிவப்பு மற்றும் சியான் கண்ணாடிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இது நேவியேஷன் கேமரா LEOS / ISROஆல் உருவாக்கப்பட்டது. தரவு செயலாக்கம் விண்வெளி செயலி மையம் அல்லது இஸ்ரோவால் மேற்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், கடந்த ஆகஸ்ட் 23 அன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன் மூலம் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் தரையிரங்கிய 4வது நாடாகவும், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாகவும் இந்தியா சாதனை படைத்தது.