பெங்களூரு (கர்நாடகா):சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின், புவி வட்டப் பாதை 5வது முறையாக இன்று அதிகாலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-ஐ நோக்கிய பயணத்தை ஆதித்யா எல்-1 விண்கலம் தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்1 விண்கலம், கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பிஎஸ்எல்வி சி57 (PSLV C57) என்ற ராக்கெட் மூலமாக ஏவப்பட்ட ஆதித்யா L1, 648 கிலோ மீட்டர் உயரத்தில் பிரிக்கப்பட்டு, பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சூரியனை நோக்கி அதன் சுற்று வட்டப் பாதையை படிப்படியாக உயர்த்தும் பணிகள் மூன்று கட்டமாக செப்டம்பர் 3, 5 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தன. அதன்படி ஒன்று, இரண்டு மற்றும் 3வது பூமியின் சுற்றுவட்டப் பாதையை இணைக்கும் செயல்பாடுகள் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
அவை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், கடந்த செப்டம்பர் 14 அதிகாலையில் ஆதித்யா எல்1 விண்கலம், பூமியின் 4வது சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக கடந்ததாக இஸ்ரோ தெரிவித்தது. குறைந்தபட்சம் 256 கிலோ மீட்டர் தொலைவும், அதிகபட்சம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 973 கிலோ மீட்டர் தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் ஆதித்யா பயணித்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் 5வது முறையாக விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது.