பெங்களூரு :வரும் ஜூலை மாதத்தின் 2 வாரத்தில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ மூத்த அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.
நிலவின் தென்துருவம் யாரும் ஆய்வு செய்யாத மர்ம பகுதியாக உள்ளது. அங்கு அளவில் அடங்காத கனிமவளங்கள் கொட்டிக் கிடப்பதாக கூறப்படுகிறது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈட்பட்டு உள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென்துருவம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக சந்திராயன் திட்டத்தை உருவாக்கிய இஸ்ரோ, கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் சந்திராயன் 2 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் இறக்கி ஆராயும் பணியில் ஈடுபட்டது. இதற்காக LVM2 ராக்கெட் மூலம் சந்திராயன் விணகலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. நிலவின் தென்துருவத்தை அடைய குறுகிய இடைவெளியே இருந்த நிலையில், விணகலத்தினுடான இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும் விண்கலத்தின் லேண்டர் கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், நிலவில் லேண்டர் விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்டது. அதேநேரம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
அதேநேரம் சந்திராயன் 1 விண்கலம் நிலவில் தண்ணீர் இருப்பு மற்றும் துருவ பனி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நிலவின் தென்துருவத்தை ஆராயும் பணியில் ஈடுபட்ட இஸ்ரோ சந்திராயன் 3 விண்கலத்தை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
சந்திராயன் 3 விண்கலத்தை நாட்டின் மிகப் பெரிய ராக்கெட் அமைப்பான LVM3 மூலம் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. அண்மையில் இதற்கான கிரியோஜினிக் மற்றும் சோதனை ஓட்ட பணிகளை இஸ்ரோ மேற்கொண்டது. இந்நிலையில் ஜூலை 2வது வாரத்தில் சந்திராயன் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளதாக இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்து உள்ளார்.
லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள தொழில்நுட்பங்களைஒ பரிசோதிக்கும் பணி நடைபெறுவதாகவும் கடந்த முறை ஏற்பட்ட தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு ஏற்ப ஆர்பிட்டரை நிலைநிறுத்தும் முயற்சிக்கான சோதனையில் ஈடுபட்டு உள்ளதாகவும் பெங்களூரு இஸ்ரோ தலைமையகத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரி தெரிவித்து உள்ளார்.
சந்திராயன் 2 விண்கலத்தின் தொடர்ச்சியான சந்திராயன் 3ல் நிலவின் பாதையில் லேண்டர் மற்றும் ரோவரை பாதுகாப்பாக தரையிறக்க தேவையான திறன் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும் விண்கலத்தில் ஒரு கருவி பழுதடைந்தால் மற்றொரு கருவி பழுதடைந்த கருவியின் பணியை முன்னெடுத்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சந்திராயன் 2 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் ஏற்கனவே நிலவை சுற்றி வருவதால், இந்த முறை லேண்டர் மற்றும் ரோவர் விண்கலங்களை மட்டும் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம். 3 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலத்தை ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
இதையும் படிங்க :கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழா - திமுக உள்பட 19 எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு!