ஹைதராபாத்: நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ வடிவமைத்த சந்திரயான்-3 விண்கலம் இன்று(ஜூலை 14) விண்ணில் ஏவப்படவுள்ளது. எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகளுக்கான 25.30 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று பகல் 1 மணிக்குத் தொடங்கியது. சுமார் ரூ.615 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் சந்திரயான்-1 திட்டத்தின் ஏவுகணை அங்கீகார வாரியத் தலைவரான எம்.சி.தத்தன் சந்திரயான்-3 திட்டம் குறித்து ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "சந்திராயன்-1 திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சந்திரயான்-2 திட்டம் 90 சதவீதம் வெற்றி பெற்றது. இதன் மூலம் நாம் நிறைய கற்றுக் கொண்டோம். முந்தையை இரு திட்டங்களில் இருந்தும் பல படிப்பினைகள் கிடைத்தால், சந்திரயான்-3 திட்டத்தில் அனைத்தும் சரியாக செய்யப்பட்டுள்ளது. சந்திரயான் 3-ல் ஆர்பிட்டர் இல்லை. சந்திரயான் 2-ன் ஆர்பிட்டர் இன்னும் செயல்பட்டு வருகிறது. அதிலிருந்து தரவுகளைப் பெறுகிறோம். அதே ஆர்பிட்டர்தான் சந்திரயான் 3-க்கும் பயன்படுத்தப்படும்.
சந்திரயான்-3 விண்கலத்தில் இரண்டு மாட்யூல்கள் உள்ளன. ஒன்று ப்ரோபோஷன் மாட்யூல் மற்றொன்று, லேண்டர்-ரோவர் மாட்யூல். ப்ரோபோஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் பிரிந்ததும் அது நிலவின் மேற்பரப்பை நோக்கிச் செல்லும். அதுதான் மிகவும் முக்கியமான தருணம். அப்போது லேண்டரை சரியாக கட்டுப்படுத்தி தரையிறக்க வேண்டும்.
கடந்த முறை லேண்டரை கட்டுப்படுத்துவதில்தான் பிரச்னை ஏற்பட்டது. இந்த முறை, லேண்டரை கட்டுப்படுத்தி சிறப்பான செயல்முறை உள்ளது. அதன் மூலம் லேண்டரின் வேகம், உந்துவிசை உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த முடியும். கார் உள்ளிட்ட பிற இன்ஜின்களைப் போல லேண்டரை கட்டுப்படுத்தலாம். இதனால், லேண்டர் நிலவின் மேற்பரப்பில் சீராக தரையிறங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த முறை கூடுதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.