ஹைதராபாத்:கடந்த ஜூலை 14ஆம் தேதி ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எம்எல்வி 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி பூமியைச் சுற்றி முடித்து நிலவை நோக்கி செல்லத் தொடங்கியது.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணியளவிலான நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தரை இறங்கி நிலவின் பரப்பைத் தொட்டது. இதன் மூலம் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவுக்குப் பிறகு நிலவைத் தொட்ட 4வது நாடாகவும், நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடாகவும் இந்தியா ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது.
இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத், “அன்புள்ள பிரதமரே, ஐயா, நாங்கள் நிலவில் தரையிறக்கி உள்ளோம். இந்தியா நிலவின் மீது உள்ளது” என தெரிவித்து உள்ளார். அது மட்டுமல்லாமல், இந்த பயணத்தில் பங்கெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரோ தலைவர் தனது நன்றியைத் தெரிவித்து உள்ளார்.
மேலும், இந்த மிகப்பெரிய சாதனைக்கு பின்னால் இருந்த அனைவருக்கும், முக்கியமாக சந்திரயான் 3 விண்கலத்தின் செயல்திட்ட இயக்குநர் வீர முத்துவேல், கல்பனா மற்றும் விண்கலத்தின் செயல்பாட்டு இயக்குநர்கள் உள்பட அனைவருக்கும் சோம்நாத் நன்றியைத் தெரிவித்து உள்ளார். மேலும், இந்த வெற்றிப் பயணம் குறித்து சந்திரயான் 3 விண்கலத்தின் செயல்திட்ட இயக்குநர் வீர முத்துவேல் கூறுகையில், “நிலவின் தென் துருவப் பகுதியை அடைந்த முதல் நாடு இந்தியா” என தெரிவித்து உள்ளார்.