தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"2040க்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பத் திட்டம்" - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

2040ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.

Somnath
Somnath

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 6:17 PM IST

ஐதராபாத் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கி சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை விண்ணில் செலுத்தி தீவிர ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சோம்நாத், மலையாள மனோரமா பத்திரிகைக்கு பேட்டி திருவனந்தபுரத்தில் பேட்டி அளித்து உள்ளார்.

அதில், நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பும் திட்டத்தை 2040ஆம் ஆண்டுக்குள் முழு வீச்சில் செயல்படுத்த இஸ்ரோ திட்டுமிட்டு உள்ளதாக தெரிவித்தார். இதற்காக இந்திய விமானப் படையில் இருந்து 4 வீரர்கள் சோதனை அடிப்படையில் விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளித்து வருவதாக கூறினார்.

பெங்களூருவில் உள்ள விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் நான்கு ராணுவ வீரர்களுக்கும் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் குறிப்பிட்டார். இஸ்ரோவின் நிலவு குறித்து ஆராய்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து உள்ளதாகவும் அடுத்த சில ஆண்டுகளில் அந்த ஆராய்ச்சிகள் உச்சத்தை தொடும் என்றும் தெரிவித்தார்.

விண்வெளி ஆராய்ச்சியில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில், அடுத்த கட்டமாக இஸ்ரோ 2 முதல் 3 இந்திய விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவை குறைந்த தூரத்தில் உள்ள புவிவட்ட சுற்றுப்பாதைக்கு அனுப்பி, 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் ககன்யான் திட்டத்தில் மதிப்பிடப்பட்ட விண்கலம் HLVM3 குழு தொகுதி மற்றும் சர்வீஸ் மாட்யூல் ஆகியவற்றை கொண்ட ஒரு ஆர்பிட்டல் மாட்யூல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.

மேலும் ககன்யான் திட்டத்தில் ஆளில்லா விணகலம் சோதனை உள்ளிட்ட பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் 2025ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். சூரியன் குறித்து ஆய்வு மேற்கொள்ள விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம், தற்போது பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளியை (எல்.1) நோக்கி பயணித்து வருவதாகவும் வரும் ஜனவரி மாதம் சுற்றுப்பாதையில் இணைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது என்றும் 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்த விணகலம் அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், கந்தகம், மாங்கனீசு, சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் உள்ளிட்ட கனிமவளங்களை கண்டிறித்து தரவுகளை அனுப்பியதாக குறிப்பிட்டார்.

மேலும் சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்ற ஆகஸ்டு 23ஆம் தேதியை இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து உள்ளதாக சோம்நாத் குறிப்பிட்டார். அடுத்தடுத்த ஆண்டுகளில் XPOSAT, Small Satellite Launch Vehicle, Reusable Launch Vehicle (RLV) programme உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

இதையும் படிங்க :அர்ஜூனா விருதுக்கு முகமது ஷமியின் பெயர் பரிந்துரை - பிசிசிஐ தகவல்!

ABOUT THE AUTHOR

...view details