தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை.. முறைகேடு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு! - Toshakhana case

முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Imran Khan
Imran Khan

By

Published : Aug 5, 2023, 2:45 PM IST

Updated : Aug 5, 2023, 3:12 PM IST

இஸ்லாமாபாத் :பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் கடந்த ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் பதவியை இழந்தார். முன்னதாக இம்ரான் கான் மீது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தது. இம்ரான் கான் பிரதமராக இருந்த போது, வெளிநாட்டு பயணங்கள், உலக நாடுகள் தலைவர்களுடனான சந்திப்பு, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது வழங்கப்பட்ட விலையுயர்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் தனிப்பட்ட முறையில் முறைகேடாக விற்றதாக குற்றச்சாட்டு இருந்தது.

அப்படி அரசு கருவூலத்திற்கு வரும் பரிசுப் பொருட்களை பேணிக் காக்கும் பணியை தோஷகனா துறை மேற்கொண்டு வந்தது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான தோஷகனா வழக்கு தொடர்பான விசாரணை இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை இஸ்லாமாபாத்தை தளமாக கொண்ட மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஹுமாயுன் திலவர் விசாரித்து வந்தார்.

இந்நிலையில் வழக்கின் இறுதி கட்ட வாதங்கள் நிறைவடைந்த நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 1 லட்ச ரூபாய் அபராதத்தை கட்ட தவறினால் இம்ரான் கானுக்கு 6 மாதங்கள் கூடுதல் சிறைத் தண்டனை விதிக்கக் கோரி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

முன்னதாக இதே வழக்கில் இம்ரான் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தோஷகனா வழக்கில் இம்ரான் கான் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்கு முன், செஷனஸ் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்து இருந்த நிலையில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என கூறப்படுகிறது.

இதையும் படிங்க :பிலிப்பைன்ஸில் சிறிய ரக பயிற்சி விமானம் விபத்து - இந்திய மாணவர், பயிற்சியாளர் உயிரிழப்பு!

Last Updated : Aug 5, 2023, 3:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details