பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில், முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாரதிய ஜனதா கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.ஐ.பி., ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி அமைந்துள்ளது.
சமீபத்தில் பேசிய பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், நடிகர், கிரிக்கெட் வீரர் என தேஜஸ்வி யாதவ், சிராக் பாஸ்வானை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதற்குப் பதிலளித்த தேஜஸ்வி யாதவ், "பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், என்னை கிரிக்கெட் வீரர் என்றும், சிராக் பாஸ்வானை நடிகரும் என்றும் மறைமுகமாக விமர்சிப்பது அவரின் சொந்த விளம்பரத்திற்காக மட்டுமேதான்.
கிரிக்கெட் அல்லது திரைப்பட பின்னணியிலிருந்து அரசியல் வருவது தவறா? பின்னர் எங்கிருந்து வர வேண்டும்? நிதிஷ்குமார் அறிக்கையின்படி, மருத்துவரும், பொறியாளரும்கூட அரசியலுக்கு வரக்கூடாது எனத் தெரிகிறது.
அனுபவமுள்ள அரசியல்வாதியான நிதிஷ் ஜிக்கு என்ன நேர்ந்தது. கிரிக்கெட் ஒரு அணியை எப்படி வழிநடத்த வேண்டும் என்பதை கற்பிக்கிறது" எனத் தெரிவித்தார்.