கோழிகோடு :ஆலப்புழா - கண்ணூர் எக்சிக்யூடிவ் விரைவு ரயில் நேற்று (ஏப் 02) இரவு எலதூர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்த போது, ரயிலில் பயணித்த மர்ம நபர், திடீரென தன் பையில் இருந்த பெட்ரோலை எடுத்து ரயிலை எரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. ரயில் பயணி மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர் தீ வைக்க முயன்றதாக கூறப்படுகிறது.
நொடிப் பொழுதில் தீ ரயிலில் பரவிய நிலையில், அதே ரயிலில் பயணித்த பெண், இளைஞர், சிறுமி உள்ளிட்டோர் உயிரை காத்துக் கொள்ள ரயிலில் இருந்து வெளியே குதித்தனர். இந்த திடீர் தாக்குதலில் 9 பயணிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பயணிகள் கொடுத்த தகவலின் படி ரயிலில் இருந்து வெளியே குதித்த 3 பேரை போலீசார் சடலமாக மீட்டனர். அவர்கள் மட்டனூரைச் சேர்ந்த ரஹ்மத், மற்றும் அவரது தங்கையின் 2 வயது மகள் சஹாரா, மற்றும் நவ்பிக் ஆகியோர் என போலீசார் அடையாளம் கண்டனர். மூன்று பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஓடும் ரயிலில் தாக்குதல் நடத்திய நபர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகி உள்ளன. தாக்குதல் நடத்திய நபர் 25 வயது மதிக்கத்தக்கவர் என்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர். அந்த இளைஞர் லிப்ட் கேட்டு இரு சக்கர வாகனத்தில் பயணித்தது, சாலையை கடக்க முயன்ற உள்ளிட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மேலும், ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த மர்ம நபரின் உடைமை எனக் கூறப்படும், செல்போன், கால் லிட்டர் எரிபொருள் பாட்டில், சிவப்பு நிறத்திலான டைரி, ஈயர் போன், பேனா, ஷார்ப்பனர், திண்பண்டங்கள், பர்ஸ், கண்ணாடிக் குவளைகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.