டெல்லி:நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்குள் குதித்தனர். அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிடிக்க முயன்ற போது, அவர்களிடம் இருந்த குப்பியில் இருந்து மஞ்சள் நிற வாயுவை வெளியேற்றினர்.
அதில் ஒரு நபர் சபாநாயகரை நோக்கி ஓட முயன்றார், மற்றொரு நபர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கை மீதேறி கோஷங்களை எழுப்பினார். பின்னர் இருவரையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் ஒரு பெண், ஒரு இளைஞர் கையில் புகைக்குண்டுடன் நின்று கொண்டு கோஷங்களை எழுப்பினர். போலீசார் அவர்களையும் கைது செய்து, நான்கு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் துவங்கியது. இந்த சம்பவத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதற்றமடைந்திருந்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா, அது வெறும் வாயும் தான், பயப்படத் தேவையில்லை. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என விளக்கமளித்திருந்தார்.
இந்த சம்பவத்தையடுத்து, டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா நாடாளுமன்றத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தார். மேலும், சிஆர்பிஎஃப் டிஜி அனிஷ் தயாள் சிங் மற்றும் டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு டிசிபி ராஜீவ் ரஞ்ஞன் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வந்தனர். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் காவல்துறையினரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.
மேலும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து ஆதாரங்களை சேகரித்தனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் சிறப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் அவைக்குள் நுழைந்தவர்கள் சங்கர் லால் சர்மாவின் மகன் சாகர் சர்மா, மற்றும் டி.தேவராஜு கவுடாவின் மகன் மனோரஞ்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே கைது செய்யப்பட்ட இளைஞர் மகாராஷ்டிராவின் லத்தூரைச் சேர்ந்த அமோல் ஷிண்டே, பெண்மணி ஹரியாணாவின் ஹிசார் பகுதியைச் சேர்ந்த நீலம் என கண்டறியப்பட்டுள்ளது. போலீசார் அவர்கள் நான்கு பேரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவைக்குள் நுழைந்தவர்களில் ஒருவரான மனோரஞ்சனின் தந்தை தேவராஜு ஈடிவி பாரத்திடம் பேசுகையில், தனது மகனின் செயலைக் கண்டிப்பதாகக் கூறினார். மேலும் அவர், “நாங்கள் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். நாடாளுமன்றத்தில் நடந்த விஷயத்தை நான் கண்டிக்கிறேன். எனது மகன் கம்ப்யூட்டர் சயின்ஸ் இஞ்ஜினியரிங் படித்தவன். நல்லவன், எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவன்.
சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என விரும்புகிறான்...செய்வோம். அவன் எப்படி இந்த செயலை செய்தான் என எங்களுக்குத் தெரியவில்லை. அவன் செய்ததில் தவறு இருந்தால் தூக்கிலிடுங்கள்” எனத் தெரிவித்தார். 2001ஆம் ஆண்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய அதே தினத்தில் நடந்த இந்த புகைக்குண்டு வெடிப்பு சம்பவமும் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மக்களவையில் புகைக்குண்டு வீச்சு..! குதித்தோடிய பார்வையாளர்களால் பரபரப்பு!