ஹைதராபாத்:உலகம் முழுவதும் சிறியவர் முதல் பெரியவர் வரை விருப்பத்துடன் ஆடும் விளையாட்டுகளில் ஒன்று சுடோகு என்ற புதிர் விளையாட்டு. சுடோகு என்றால் ஜப்பானிய மொழியில் எண்-இடம் என்று பொருளாகும்.ஒவ்வொரு எண்ணும் ஒற்றையாக இருக்கவேண்டும் என்று பொருள்படும் ஜப்பானிய சொற்றொடர் தான் சுடோகு என்பதாகும். இது 9x9 என்று அமைந்த 81 சிறு கட்டங்களில் அடங்கிய ஒரு விளையாட்டு ஆகும்.
ஒவ்வொரு நெடுக்கு அல்லது குறுக்கு வரிசையில் உள்ள ஒன்பது கட்டங்களில் 1 முதல் 9 வரையிலான எண்களை நிரப்ப வேண்டும். இந்த எண்களை ஒரு வரிசையில் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறையாகும். ஒவ்வொரு கட்டத்திலும் என்ன எண் வரக்கூடும் என்பதை மிகத் துல்லியமாக முடிவு செய்து நிரப்ப வேண்டும். இதில் உள்ள 81 கட்டங்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு எண்ணை தவறாக நிரப்பினாலும், சுடோகு புதிரை வெற்றிகரமாக முடிக்க முடியாமல் போய்விடும்.
ஒரு குறிப்பிட்ட கூட்டுத்தொகை வருமாறு எண்களைக் கொண்டு விளையாடும் இந்த புதிர் விளையாட்டை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கணிதவியலாளர் லியோன்ஹார்ட் யூலர் என்பவர் கண்டுபிடித்தார்.இந்த விளையாட்டின் நவீன வடிவம் அமெரிக்காவின் முறைப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் 1980ஆம் ஆண்டு இந்த விளையாட்டை பிரபலப்படுத்தியவர் மகி காஜி என்று கூறப்படுகிறது.
சுடோகு ஒரு எண்ணை அடிப்படையாக கொண்ட ஒரு புதிர். எனவே இதற்கு தீர்வுகாண மொழி அறிவு அவசியமில்லை. சுடோகு உலக அளவில் பிரபலமாக விளங்குவதற்கு இதுவும் ஒரு மிக முக்கிய காரணம்.முதன்முதலாக 2006-ல், இத்தாலி நாட்டில் உலக சுடோகு சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளிலும் சுடோகு உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.