பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பேலஸ் மைதானத்தில் இன்று (ஜன 20) முதல் மூன்று நாள்களுக்கு, தினை மற்றும் ஆர்கானிக்ஸ் - சார்வதாச வர்த்தக கண்காட்சி 2023 நடைபெறுகிறது. விவசாயிகளையைும், தினை வகைகளையும் ஊக்குவிக்கும் விதத்தில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில், தேசிய மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
கர்நாடக வேளாண் துறை, KAPPEC (கர்நாடக மாநில விவசாய உற்பத்தி பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி கழகம் லிமிடெட்) மற்றும் ICCOA (கரிம வேளாண்மைக்கான சர்வதேச திறன் மையம்) இணைந்து நடத்தும் இந்த கண்காட்சியை, பேலஸ் மைதானத்தின் திரிபுரவாசினி வளாகத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியை கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தொடக்கி வைக்கிறார். இதில், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் ஜோஷி, பகவந்த் கூபா, ஷோபா கரந்த்லாஜே, கைலாஷ் சவுத்ரி, ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த சர்வதேச தினை வர்த்தக கண்காட்சி கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் அஸ்வத்த நாராயணன் தலைமையிலும், வேளாண் அமைச்சர் பி.சி.பாட்டீல் பொறுப்பிலும் நடைபெற உள்ளது.