பொதுவாக நாய்களைப் போலப் பூனைகளுக்கு அன்பு செலுத்துவதில் ஆர்வமில்லை என்னும் கருத்து ஆதிகாலம் தொட்டே பலரால் பகிரப்படுகிறது. பெரும்பாலும் பூனைகளின் உடல்மொழி, அவற்றின் தன்மையை உணராதவர்களே இப்படி கூறுவார்கள். பூனை வளர்பவர்களுக்கே, அதன் அன்புத்தன்மையை புரிந்துகொள்ள முடியும்.
மேற்கூறிய, கார்த்திக் நேத்தாவின் வரிகளுக்கு விளக்கமும் இதுதான். அன்றாடம் நீங்கள் பூனைகளுக்கு உணவளித்து, அடைக்கலமளித்து எஜமானராகவோ, நண்பராகவோ இருந்தால் உங்களைப் பூனைகள் உணவுக்காகவும், அன்புக்காகவும் காலை உராய்ந்துகொண்டிருக்கும்.
இந்த செய்கை உணவு உண்டுவிட்டாலும் முடிவதில்லை. விளையாடுவதற்காகவோ, தனது இருப்பை உணர்த்துவதற்காகவோ பூனைகள் உங்களை சுற்றிவரும். இது நிச்சயம் பின்னால் வாலாட்டி வரும் நாய்களின் அன்புக்கு நிகரானதுதான்.
பூனை உணவு உண்டபிறகு கண்டுகொள்ளாது என்று நீங்கள் கூறினால், அது பாதி உண்மைதான். பூனைகள் புலி குடும்பத்தைச் சேர்ந்தவை. பெரும்பாலும் வேட்டையாடி உண்ணும் தன்மை இதற்கு உண்டு. ஆனால், பூனைகள் வீட்டில் உணவளிக்கப்பட்டு வளர்த்தப்படுவதால், அவை வேட்டையாடி உண்பதிலிருந்து மாறுபடுகிறது.
பூனைகள் உணவுக்குப்பின், சுறுசுறுப்புடன் விளையாடவோ, வேட்டையாடச் சென்றுவிடும். அல்லது அவற்றுக்கு மிகவும் பிடித்த தூங்கும் வேலையைப் பார்க்கும். இதன் காரணமாகவே பூனைகள் உணவுக்குப் பின் உங்கள் கண்களில் படுவதில்லை. ஒரு வேளை உங்களது பூனை படுசுட்டியாய் இருந்ததால், உங்களுக்கு உடல் உழைப்பு கொடுப்பதற்காக உங்களிடம் தாவித் தாவி வந்து விளையாடும்.
பூனைகளின் விசுவாசம்:
நாய்களைப் போலல்லாமல் பூனைகளிடத்தில் விசுவாசம் காண்பது அரிது. இதுவும் ஒருவகையில் சரிதான். இருப்பினும் பூனைகளிடம் விசுவாசத்தை எதிர்பார்ப்பதைவிட நட்பு பாராட்டுவதே சிறந்தது. சில நாள்களுக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் பூனை ஒன்று தன்னை வளர்த்தவர்கள் வீட்டில் பாம்பு ஒன்று நுழைய முயற்சிக்கவே, அதனை வீட்டுக்குள் நுழையவிடாமல் துரத்தியடித்தது. பூனைகள் விசுவாசமற்றவை என்கிற கருத்தை இந்த செய்தி பொய்ப்பித்திருக்கிறதுதானே.