புதுச்சேரி: உள்ளாட்சித் தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வார்டுகள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி முத்தியால்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரகேஷ் குமார் உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, உள்ளாட்சித் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீற முடியாது எனக் கருத்து தெரிவித்து புதுச்சேரி அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரி அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், அலுவலர்களுடன் நேற்று (அக்டோபர் 3) ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், வார்டு ஒதுக்கீடு தொடர்பாக மறு ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரியில் இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்போவது இல்லை என்பதால், அக்டோபர் 21 முதல் நடத்த உள்ள தேர்தலைத் தள்ளிவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கை அக்டோபர் 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரிக்கைவைக்கப்பட்டது. புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் முதலமைச்சர் முடிவெடுக்க உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
வார்டுகள் ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என அறிவுறுத்திய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, அதுவரை வேட்புமனுக்கள் பெறுவதைத் தள்ளிவைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரி அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க ஏதுவாக வழக்கை நாளை (அக்டோபர் 5) தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:T23 புலியை சுட்டுக்கொல்ல எதிர்ப்பு தெரிவித்த வழக்கு நாளை விசாரணை